தீபாவளி நாட்கள் மற்றும் அடுத்தடுத்த பண்டிகைகளில் காஜு கட்லி முதல் முந்திரி பருப்பு ரோல், என பல வகையான இனிப்பு வகைகளை செய்து விருந்தினர்களை உபசரிக்கலாம்.


தீபங்களின் திருவிழாவான தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி களை கட்டி உள்ள இந்த நாட்களில் வீடுகளில் புதுசு புதுசாக ஒவ்வொரு இனிப்பு பலகாரங்களையும் செய்து  கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.


ஐந்து நாட்கள் நீடிக்கும் இந்த தீபாவளி கொண்டாட்டமானது, முதல் நாளான
 தண்டேராஸில் தொடங்கி ஐந்தாவது நாளான பாய் தூஜ் அன்று நிறைவு பெறுகிறது. இந்த தீபாவளியானது அக்டோபர் 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.


இந்தியாவைப் பொறுத்தளவில் பண்டிகைகளும் பாரம்பரிய கலாச்சாரங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையாக இருக்கின்றன. ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் விரத முறைகள், அதற்கான உணவு வகைகள் என சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தீபாவளி என்பது  இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இந்தியாவில் வருடம் தோறும் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைகளிலும் இனிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, இனிப்பில்லாமல் எந்த பண்டிகையும்  முழுமை பெறாது என்பது தான் உண்மை.


 ஆகவே பண்டிகை காலங்களில் இந்தியாவை பொறுத்த அளவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் குறிப்பிட்ட இனிப்பு வகைகள் பிரபலமானதாக இருக்கின்றன. ஒவ்வொரு மாநில மக்களும் தனித்துவமான முறையில் இனிப்பு பலகாரங்களை செய்து தமது பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் முந்திரி பருப்பு மூலம் செய்யப்படும் முக்கிய சில இனிப்பு வகைகளை பார்க்கலாம்.


1 .ஜாஃப்ரானி காஜு(முந்திரி பருப்பு) கட்லி - 


காஜு(முந்திரி பருப்பு) கட்லியை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம். முந்திரிப் பருப்பு உணவு என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது, அந்த வகையில் முந்திரி பருப்பால் செய்யப்படும் இந்த இனிப்பு பலகாரத்தை குறைந்த நேரத்தில் செய்து முடிக்கலாம்.


 


 தேவையான பொருட்கள்:


1 டீஸ்பூன் குங்குமப்பூ
100 கிராம் முந்திரி 
6 டீஸ்பூன் சர்க்கரை
1/2 தே.க ஏலக்காய் தூள்
2  வெள்ளி  தாள்கள்  



செய்முறை:



1. முதலில் முந்திரி பருப்பை நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.


2.அடுத்து பாத்திரத்தில் போதுமான தண்ணீரை சூடாக்கவும்.


3.பின்னர் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கலந்து நன்கு பாகு கெட்டியாகும் வரை காய்த்துக் கொள்ளவும் .


4.அடுத்து ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.


5. அத்துடன் சர்க்கரை பாகுடன் பொடி  செய்த  முந்திரியை சேர்த்து நன்றாக கலந்து சுமார் 3 நிமிடங்கள் கிளறவும்.


6.முந்திரி கலவையை ஒரு தட்டையான பாத்திரத்தின் மீது பரப்பி  குளிர விடவும்.


7.பின்னர் முந்திரி கலவை ஆறியதும்  அதனை பிசைந்து பதப்படுத்திக்கொள்ளவும்.


8.அடுத்து முந்திரி கலவையை பர்ஃபி ட்ரேயில் பரப்பி, சில்வர் தாள் கொண்டு அலங்கரித்து சதுரமாக வெட்டி பரிமாறவும்.


 


2. காஜு (முந்திரி) மைசூர் பாக்:


 நெய், முந்திரி பருப்பு மற்றும் கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் இந்த மைசூர் பாக் மிகவும் மென்மையானதாக , சுவையானதாக இருக்கும்.


இந்த காஜு (முந்திரி) மைசூர் பாக்  கர்நாடக மாநில மக்களால் செய்யப்படும் மிகவும் பிரபலமான இனிப்பு உணவாகும். புராண வரலாற்றின் படி, மைசூர் பாக் முதன்முதலில் மைசூர் அரண்மனையில் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இது 'ராயல் ஸ்வீட்' என அழைக்கப்படுகிறது.



 தேவையான பொருட்கள்:


 1-1/2 கப் சர்க்கரை
2 கப் தண்ணீர்
1 கப் கடலை மாவு 
1/2 கப் முந்திரி தூள்
2 கப் நெய்


செய்முறை:



1. முதலில் கடலை மாவை தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.


2. குறைந்த தீயில் சர்க்கரையை தண்ணீரில் போட்டு  கரைந்ததும் நன்கு காய்ச்சி கெட்டியான பாகு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.



3. சர்க்கரை பாகில் கொஞ்சம் கொஞ்சமாக கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து கிளறவும்.


4. பின்னர் பொடி செய்யப்பட்ட முந்திரியை  கலக்கவும், அத்துடன் நெய் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.


 5. மைசூர் பாக்கின் நிறம் மற்றும் அமைப்பு மாறும் வரை லேசான தீயில் வைத்து பழுப்பு நிறமாகும் வரை கிண்டவும்.


6.ஒரு தட்டையான ட்ரேயில் முந்திரி மைசூர் பாக் கலவையை போட்டு நெய் நன்கு மேலாக மிதக்கும் வரை  சமமாக தட்டவும்.
 
7. பின்னர் நன்கு ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.


 


 3 . சாக்லேட் காஜு  கட்லி:


 இந்த முந்திரி மற்றும் உருகிய சாக்லேட்டுடன் செய்யப்படும்  இனிப்பு உணவு, சிறுவர்களுக்கும், சாக்லேட்டை விரும்புவோருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பாக இருக்கும்.


தேவையான பொருட்கள் :


2- 1/4 கப் முந்திரி
1 கப் சர்க்கரை
100 மில்லி தண்ணீர்
1 கப் பால் சாக்லேட் அல்லது டார்க் சாக்லேட்


செய்முறை:


1.முதலில் முந்திரி பருப்பை மிக்ஸியில் அரைத்து நன்றாக பொடி செய்து கொள்ளவும்.


2.பின்னர் அடி கனமான பாத்திரத்தை எடுத்து, அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.மிதமான தீயில் வைத்து கெட்டியான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளவும்.


4. சர்க்கரை பாகு நன்கு கெட்டியானதும் அரைத்த முந்திரி பொடியை இட்டு 4-5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும்.


5. முந்திரி கலவையை தொடர்ந்து கிளறும்போது  படிப்படியாக கெட்டியான பேஸ்டாக மாறும்.


6. பின்னர் கலவையை அடுப்பில் இருந்து இறக்கி குளிர விடவும். முந்திரி கலவை சிறிது ஆறியவுடன்,  உள்ளங்கையில் நெய் தடவி,   நன்கு கைகளால் மிருதுவாகும் வரை பிசையவும்.


6. அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு சூடாக்கி, அதன் மேல் ஒரு தண்ணீர் புகாத கிண்ணத்தில் சாக்லேட் துண்டுகளை இட்டு நன்கு உருக்கி கொள்ளவும்.


 7.சாக்லேட் நன்கு உருகியதும், பிசைந்து வைத்திருக்கும் காஜு கட்லி மாவை இட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.


9. பின்னர் ஒரு தட்டையான ட்ரேயில் நன்கு பரப்பி, சமப்படுத்தி துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.
 


4. காஜு ரோஸ் பர்ஃபி:



இந்த கஜு ரோஸ் பர்ஃபி செய்வதற்கு எளிமையாகவும் மிகவும் சுவையாகவும் இருப்பதால் அனைவருக்கும் பிடித்த இனிப்பாக இருக்கும்.
 


 தேவையான பொருட்கள்:


500 கிராம் வெள்ளை சாக்லேட்
200 கிராம் வறுத்த முந்திரி
2 கிராம் உலர்ந்த ரோஜா இதழ்கள்
1-2 சொட்டு கற்பூரம்
10  குங்குமப்பூ
5  ஏலக்காய்
ரோஸ் சிரப்



செய்முறை:



1. முதலில் சாக்லேட்டை உருக்கி, முந்திரி பருப்பில் பாதி சேர்த்து கலந்து கொள்ளவும்.


2. அத்துடன் மீதமுள்ள கற்பூரம், குங்குமப்பூ ஏலக்காய் ,ரோஸ் சிரப் பொருட்களை சேர்த்து நன்கு கிளறவும்.


 3 பின்னர் அதனை ட்ரேயிலோ அல்லது அச்சுக்களிலோ ஊற்றி சமப்படுத்தி கொள்ளவும்.


4.அடுத்து சமப்படுத்திய கலவையின் மேல் ரோஜா இதழ்கள், மீதமுள்ள வறுத்த முந்திரியைச் சேர்த்து அலங்கரிக்கவும்.


5. பின்னர் பத்து நிமிடங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து இறுகியவுடன் அதனை துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.



5. காஜூ பிஸ்தா ரோல் :


இது பிஸ்தா கலவையால் நிரப்பப்பட்ட முந்திரி மாவால் செய்யப்பட்ட உருளை வடிவமாகும்.
 அதன் சுவையை மேலும் அதிகரிக்க, குங்குமப்பூ மற்றும் வெள்ளி தாள் கொண்டு அலங்கரிக்கலாம்.



 தேவையான பொருட்கள்:


1/2 கிலோ முந்திரி பருப்பு
400 கிராம் சர்க்கரை
1/2 கிலோ பிஸ்தா
250 கிராம் சர்க்கரை
வெள்ளி தாள்
குங்குமப்பூ



1. முதலில் 1/2 கிலோ முந்திரி பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைத்து பின்னர்  பேஸ்ட் செய்யவும். அதில் 250 கிராம் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 


2. அரைத்த முந்திரி கலவையை  45 நிமிடங்களுக்கு மெதுவான தீயில் வைத்து நன்றி கிளறி  மா தன்மையை உருவாக்கவும்.


2. பின்னர் தனியாக 1/2 கிலோ பிஸ்தாவுடன் 250 கிராம் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.


3.  அரைத்த பிஸ்தாவை குறைந்த தீயில் அரை மணி நேரம் கிளறிக் கொள்ளவும்


4. பின்னர் தயார்படுத்தி வைத்துள்ள முந்திரி மாவை ஒரு ட்ரேயில் போட்டு நன்கு சமமாக மெல்லியதாக தட்டிக் கொள்ளவும்.


5.  அடுத்து தட்டிய முந்திரி பேஸ்டின் மேல் தயார்படுத்தி வைத்திருக்கும் பிஸ்தா கலவையை வைத்து நன்கு சமப்படுத்தி கொள்ளவும். தற்போது இரண்டு அடுக்குகளாக இருக்கும்.


6. பின்னர் பிஸ்தா நிரப்பிய முந்திரி கலவையை உருளை வடிவத்தில் ரோல் செய்து எடுக்க வேண்டும்.


7. பின்னர் ரோல் வடிவத்தில் தூண்டுகளாக வெட்டி குங்குமப்பூ மற்றும் வெள்ளித் தாள்களை கொண்டு அலங்கரிக்கலாம்.