தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த மாதங்களில் கார்த்திகை மாதம் ஒன்று. கார்த்திகை மாதத்தில் வருகின்ற சஷ்டி பெருவிழா வெகு விமர்சையாக தமிழகம் முழுவதும் முருகன் திருக்கோவில்களில் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு முருகன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான அலங்காரத்தில் முருகப்பெருமான் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று மாலை சூரசம்கார விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு காலை 6 மணி முதல் சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. 800-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு முருகனுக்கு தொடர் சஷ்டி பாராயணம் செய்தனர். முன்னதாக முருகப் பெருமானுக்கு பால், இளநீர், தேன், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர்களை கொண்டு ராஜா அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அர்ச்சகர்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு சஷ்டி பாராயணம் செய்து முருகனுக்கு அர்ச்சனைகள் செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில் முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சஷ்டி பாராயணத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் தாங்கள் வைத்து பூஜை செய்த முருக பெருமானுக்கு மங்கள ஆரத்தி காண்பித்தனர். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி பாராயணம் இன்று நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பாராயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாலை சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.