காஞ்சிபுரம் யதோத்தக் காரி பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் 7- வது  நாளான நேற்று திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சத்ய விரத ஷேத்திரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில்,108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், திருவெஃகா பெரிய பெருமாள் என அழைக்கப்படும், ஸ்ரீ கோமளவள்ளி நாயிகா சமேத ஸ்ரீ யதோத்த காரி பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.



 

யதோத்த காரி பெருமாள் திருக்கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 7வது நாளான நேற்று திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு பெரிய பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீயதோத்த காரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகை பூ, மலர் மாலைகள் அணிவித்து திருத்தேரில் எழுந்தருள செய்து துப, தீப, ஆராதனைகள் நடைபெற்றது.



 

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல, காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க வேதபாராயணம் ஓலிக்க, பஜனை கோஷ்டியினர் ஆடி பாடி வர ஸ்ரீ யதோத்த காரி பெருமாள் திருத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா, கோஷமிட்டு பெருமாளை வணங்கி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.