காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவ விழாவை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி தாயாருடன், காளிங்க நர்த்தன திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாளை பக்தர்கள் வணங்கி சென்றனர்.


நவராத்திரி விழா 2024


இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையாக வட இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜையாகவும், அதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகவும் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் நவராத்திரி தினத்தன்று, கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு முக்கிய கோோயில்களில், நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.




காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நவராத்திரி விழா


108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


நவராத்திரி உற்சவத்தின் 5ம் நாளில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருக்கு, சிறப்பு திருமஞ்சனங்கள் செய்யப்பட்டு, அரக்கு கரை வெண் நிற பட்டு உடுத்தி,வைர, வைடூரிய, திருவாபரணங்கள் அணிவித்து மல்லிகைப்பூ, மனோரஞ்சிதப்பூ, பஞ்சவர்ண பூ மாலைகள்,சூட்டி சிறப்பு அலங்காரத்தில் காளிங்க நர்த்தன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.


பத்தி பரவசத்தில் பக்தர்கள்


ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், மேளதாளங்கள், முழங்க கோவில் வளாகத்தில் உலா வந்து, நூற்றுக்கால் மண்டபத்திற்கு வரதராஜ பெருமாள் எழுந்தருளி, நாதஸ்வர இசை ஒலிக்க ஊஞ்சல் சேவை கண்டு அருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 




பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் தேவியர்களுடன் எழுந்தருளி தேவாதி ராஜனாக காட்சியளித்த, வரதராஜ பெருமாளுக்கு வேதபாராயண கோஷ்டியினர் வேத மந்திரங்களை பாட தூப தீப ஆராதனைகள்செய்யப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்து வணங்கி, தீர்த்தம்,சடாரி, பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ( Kanchipuram Varadharaja Perumal Temple)


வைணவத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக சிறப்பு வாய்ந்த கோயிலாக பார்க்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், 31 வது திவ்யதேசம் கோயிலாக உள்ளது. இக்கோயிலின் மூலவராக , தேவராஜ பெருமாள் - தாயார் சன்னதியில் பெருந்தேவி தாயார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். உற்சவராக பேரருளாளன் உள்ளார்.


அத்திகிரி 


வரதராஜ பெருமாள் கோயில் சன்னதி அமைந்துள்ள இடம் அத்திகிரி என அழைக்கப்படுகிறது. மலை மீது காட்சி தருவதால் மூலவருக்கு மலையாளன் பெயரும் உண்டு. மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். 




நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் வரதராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் 24 படிகள் ஏறி செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பிற வைணவ கோயில்களில், எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.‌