காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் பவித்ர உற்சவ நிறைவு நாளில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எம்பெருமான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பவித்ரோத்ஸவம்
பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் . மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும்.
இறை சக்தி,
இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும். திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப்படுகிறது. கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும்.
எம்பெருமான் திருவடி கோவில்
அவ்வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் கடந்த 30 ம் தேதி துவங்கி செப். 6 ம் தேதி வரை நடைப்பெற்றது. காலை, மாலை என இரு வேலைகளில் ஆராதனைகள் நடைபெறும். மாலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எம்பெருமான் திருவடி கோவில் வரை புறப்பாடு செல்வார்.
கடைசி நாளான நேற்று மாலை 5 மணி அளவில் எம்பெருமான் மலர்மாலையில் சூடி ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின் சிறப்பு பூஜைகள் சிறப்பு வழிபாடு என சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. நிறைவு நாளில் எம்பெருமானை தரிசிக்க வழிநெடுக்கிலும் பக்தர்கள் சூடம் ஏற்றி வரதராஜரை வழிபட்டனர்.