பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக கோவிலாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில்  ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் இணைந்து காட்சி அளிக்கின்றனர். ஏகாம்பரநாதர் கோவிலில் முக்கிய விழாவாகக் கருதப்படும், பாரிவேட்டை உற்சவத்தை முன்னிட்டு தனித்தனியாக பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் ஏலவாா் குழலியும், ஏகாம்பரநாதரும் திம்மசமுத்திரம் கிராமத்துக்கு புறப்பட்டனா். அவா்களை அந்த கிராம மக்கள் காவடியாட்டம், மயிலாட்டம், வாத்தியங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சிவவாத்தியங்கள் முழங்க கோயிலிலிருந்து கிராமத்துக்கு வரவேற்றனா். 



 

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் ஓதுவாா் தமிழ்ச்செல்வன் தலைமையில் திருமுறை பாராயணக் குழுவினரும் சுவாமியுடன் வந்தனா். சுவாமியையும், அம்மனையும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள திரிபுராந்தகேசுவரா் கோயிலுக்கு எழுந்தருளி அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் அருள்பாலித்தனா்.



 

இருவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளையும் ஏகாம்பரநாதா் கோயில் அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையிலான குழுவினா் செய்தனா். ஏகாம்பரநாதா் வருகையை முன்னிட்டு, திரிபுராந்தகேசுவரா் கருவறையில் சரவணப் பொய்கை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திரிபுராந்தகேசுவரரை தரிசித்தனா். 

 



 

கோயில் வளாகத்தில் அன்னதானமும், பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சூரியனாா் கோயில் ஆதீனம் சிவாக்கர தேசிக சுவாமிகள் திருமுறை அருளுரை நிகழ்த்தினா். விழாவில் அறநிலையத் துறை செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன், வேதமூா்த்தி, காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி ஆா்.நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பாரிவேட்டை விழாக் குழுத் தலைவா் டி.எஸ்.லோகநாதப்பிள்ளை, செயலாளா் டி.டி.ராஜாமணி, பொருளாளா் சி.ஆனந்தன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

 

ஏகாம்பரநாதர் கோயில் தல வரலாறு


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பர நாதர் கோயில், பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.  இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன்பெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் தலவிருட்சம் என போற்றப்படும் மாமரத்தின் வயது 5000 ஆண்டுகள். இந்த மாமரத்தின் கீழ் உமையாள் தவம்  செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது.


விழாக்கள்


இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி  உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன