108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் பாண்டவர் தூதப் பெருமாள் திருக்கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு சுவாமியை வணங்கி வழிபட்டு சென்றனர். 


கும்பாபிஷேகம் / குடமுழுக்கு விழா ( Kumbhabhishekam )


கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோரின் வாழ்க்கை. அவ்வாறு கட்டப்படும் கோவில்களுக்கு  குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடமுழுக்கு விழா  நடத்த வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அவ்வாறு குடமுழுக்கு விழா செய்வது மூலம் உள்ளிருக்கும்  கடவுளின் சிலைக்கு தெய்வத்தன்மை புதுப்பிக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. குடமுழுக்கு விழாவானது புனித கலசத்தில் பல்வேறு, ஆறுகளின் புனித நீரை நிரப்பி மந்திரங்களால் தெய்வத்தன்மை, ஏற்பட்ட நீரினால் சிலைகளுக்கும் கோபுரத்தின் உச்சியில் கலசத்தங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்துவார்கள்.


 




தெய்வ சிலைகளும் கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் கோவிலுக்கு செல்லாமல் கோபுர தரிசனம் மூலமாக கடவுள் அருளைப் பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதன் அடிப்படையில் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற வார்த்தை வந்ததாகவும், ஒரு கருத்து உள்ளது. மிகவும் முக்கியம் வாழ்ந்த விழாவாக குடமுழுக்கு விழா பார்க்கப்படுவதால் மிகச் சிறிய கோவில் என்றால் கூட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண வருகை புரிவார்கள்.




பாண்டவர் தூதப் பெருமாள் திருக்கோவில்


கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுட்கால வழிபாட்டு தலமாகவும் விளங்கி வருவது, ஸ்ரீ ரூக்மணி சமேத பாண்டவ தூத பெருமாள் திருக்கோவில்.




பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமிழிசையாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடகம் என மங்களாசாசனம் பாடப்பட்ட தலமாக உள்ளது.


திருக்கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர் துரியோதனன் சபைக்கு தூது சென்ற சமயத்தில் எடுத்த விஸ்வரூபத்தில் அடிப்படையில் மிகப்பெரிய வடிவில் வீற்றிருந்த பெருமாளாக காட்சியளித்து வருகிறார்.


அத்தகைய சிறப்புமிக்க திருக்கோவிலில் கடந்த 1989 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றிருந்த நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.




கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு,பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


பின்னர் கோவில் அர்ச்சகர்கள் ராஜகோபுரத்திற்கும், மூலவர் கோபுரத்திற்கும், ருக்மணி தாயார் சன்னதி கோபுரத்திற்கும் புனித நீர் தெளித்து கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக நடத்தினார்கள். பாண்டதூதப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் திருவிழா கோலம் போட்டு இருந்தது. காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.