பல்வேறு பழைய கோயில்கள் தற்போது புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்று வருகிறது. அவ்வகையில் பெரிய காஞ்சிபுரம், சர்வதீர்த்த குளக்கரை பகுதியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு குளக்கரை மாரியம்மன் ஆலயம்  புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் துவக்கப்பட்டு அப்பணிகள் முடிவடைந்தது.



 

இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி பூஜை உடன் மகா கும்பாபிஷேக விழாவானது துவங்கியது. மேலும்  சிவாச்சாரியார்களால் புனித கலசங்கள் நிறுவப்பட்டு நான்கு கால பூஜைகளும் முடிவுற்றது. இந்நிலையில் இன்று காலை நான்காவது கால பூஜை நிறைவு பெற்று, யாக சாலைகளிலிருந்து  புனித கலசங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம்  வந்த பின் மூலவர் சன்னதிக்கும், கோபுரம்  உள்ளிட்டவைகளுக்கு வேதவிற்பனர்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகமானது, வெகு விமரிசையாக நடந்தது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டது.



 

இந்த மகா கும்பாபிஷேகத்தையொட்டி  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வந்திருந்த  அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



 

குன்றத்தூரில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால்சாமி கோயில் கும்பாபிஷேகம்

 

 



 

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் அருள்மிகு ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி திருக்கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது கோயில் புனரமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகளுடன் யாகசாலைகள் வளர்க்கப்பட்டு துரைராஜ் பட்டாச்சாரியார்கள் கலசங்களில் இருந்த புனித நீரை கோயில் கோபுரத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.