தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று. பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கொடியேற்றம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. திருவிழாவினை ஒட்டி, சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் சுவாமி காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 7 மணி அளவில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6ஆம் தேதி நாளை, மாலையில் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை மகாதீபமும் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்கதர்களின் காலனி பாதுகாப்பு மையம் 16 கால் மண்டபம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் 16-கால் மண்டபம், சன்னிதி தெரு, கீழரதவீதி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் வழியாக மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடித்த பக்தர்கள் அன்னதான மண்டபம் வழியாக வெளியேறி லாலா கடை சந்திப்பு, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக கோயில் வளைவை அடைந்து திருநகர் அல்லது பெரியார் பேருந்து நிலையம் செல்லலாம். கிரிவல பாதை மற்றும் திருப்பரங்குன்றம் மேம்பாலங்களில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்