புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவானது வெகுவிமர்சையாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் இவ்விழாவின் நான்காம் நாளான இன்று உற்சவர் சண்முக பெருமானுக்கு அபிஷேகமானது நடந்தேறி முழுவதும் பச்சை நிற மாலைகள் அணிவித்து இலட்சார்ச்சனைகளாது நடைபெற்றது. இதில் ஆறுமுகங்களை கொண்ட சண்முக பெருமானுக்கு ஆறுமுகங்களுக்கும் ஒரே நேரத்தில் தூப தீப ஆராதனைகளானது நடைபெற்றது.காலை முதல் மாலை வரை நடைபெற்ற நான்கு கட்ட இலட்சார்ச்சனையில் ஏராளமானோர் பங்குகொண்டு முருக பெருமானை வேண்டி வணங்கி வழிபட்டனர்.
அதனைதொடந்து மாலை உற்சவர் முத்துகுமாரசுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளானது நடைபெற்று கதம்ப மாலை அணிவித்து,தங்க,வைர ஆபரணங்கள் அணிந்து அவருக்கு உரிதான மயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்த முத்துகுமார சுவாமிக்கு தூப,தீப ஆராதனைகளானது நடைபெற்று நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கந்தசஷ்டி பெருவிழாவின் நான்காம் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்து பக்தி பரவச கோஷங்களை எழுப்பி கோவில் பிரகாரத்தின் 108சுற்றுகள் வலம் வந்து முருகப்பெருமானை மனமுருகி வேண்டி வணங்கி வழிபட்டு சென்றனர்.
தல வரலாறு
மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.
பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.
தல விளக்கம்
குமரகோட்ட தல விளக்கத்தில் அறிவது, முருகப்பெருமானார் தாருகன் முதலாம் அசுரரை அழித்துத் தேவரை வாழ்வித்தபின் திருக்கயிலையில் அம்மை அப்பரை வணங்கி அருள்விளையாடல்களைப் புரிந்துகொண்டிருந்தனர். பிரமன் தேவர் குழாங்களுடன் சிவபிரானை வணங்கச் செல்லும்பொழுதும் மீளும் பொழுதும் முருகப் பெருமானை மதியாது சென்றனன். அவனது அகந்தையை நீக்கக் கருதிய கருணையொடும் குமரப்பிரானார் வேதனை அடைந்து ஒருவாறு வணங்கிய வேதனை ‘வேதம் வல்லையோ’ என வினவினர். ஓம் மொழிப் பொருளின் உண்மைகாணாது மயங்கிய பிரமனைக் குட்டிச் சிறையி லிட்டுப் பிரம கோலத்துடன் படைத்தற்றொழிலை மேற்கொண்டனர் தேவசேனாதிபதி.
தேவர் முறையீட்டிற்குத் திருச்செவி சாத்திய சிவபிரானார் நந்தியை விடுத்தபோது முருகப்பெருமான் பிரமனைச் சிறைவீடு செய்யாமையின் தாமே போந்து பிரமனை விடுவித்தனர். பிரமன் வேற்கடவுள் கருணையால் நல்லறிவு பெற்றேனென வணங்கித் தன் இருக்கை சார்ந்து படைப்புத் தொழிலை மேற்கொண்டனன். சிவபிரான் மடித்தலத்திலிருந்து முருகப்பெருமான் ஓம்மொழிப் பொருளைத் தந்தையார்க்கு வெளிப்படுத்தி அவரருளைப் பெற்றனர். ஆயினும் தந்தையார் பணியாகிய பிரமனைச் சிறைவீடு புரியாமையான் நேர்ந்த பிழைதீரத் தம்பெயரால் தேவசேனாபதீசர் எனச் சிவலிங்கம் இருத்திப் போற்றினர்.
முருகப்பெருமான் மான்தோலுடையும், தருப்பை அரைநாணும், திருக்கரங்களில் உருத்திராக்க வடமும், கமண்டலமும் விளங்க நினைப்பவர் பிறப்பறுதற்கு ஏதுவாகிய குமரக்கோட்டத்துள் முனிவரர் போற்றத் தேவசேனாபதீசர் திருமுன்பு மேற்கு நோக்கிய திருக்கோலத்துடன் நின்றருள் புரிவர். அவர்தம்மை வணங்குவோர் இன்பமுத்தியை எளிதிற் பெறுவர். அடியவரை மயக்கும் குற்றத்தினின்றும் எஞ்ஞான்றும் தவிரவும் மார்க்கண்டேயரை வஞ்சகப் படுத்த முயன்ற பிழை தீரவும் தேவசேனாபதீசப் பெருமானை வணங்கி ‘உருகும் உள்ளக்கோயிலான்’ என்னும் திருப்பெயருடன் திருமால் குமரகோட்டத்தில் முருகப்பெருமான் அருளையும் பெற்று விளங்குகின்றனர். குமரகோட்டம் என்னும் இத்தலம் காஞ்சிக்கு நடுநாயகமாய் விளங்குகின்றது.