பஞ்சபூத தளங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இவ்விழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 27-ந் தேதி 3-ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் 3-ந் தேதி பஞ்சமூர்த்திகள் மகாரதங்கள் தேரோட்டம் நடக்கிறது. 6-ந் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள உள்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

  


 




அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்;


கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு முழு தளர்வுகளுடன் தீபத் திருவிழாவிற்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே அனைத்து துறை அலுவலர்களும் தீபத் திருவிழாவில் முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும். அனைத்து தீப திருவிழாவும் நமக்கு முதல்முறையான திருவிழா என நினைத்து கடுமையான வேலையை செய்ய வேண்டும். திருவண்ணாமலையில் மின் இணைப்பு தடை இல்லாமல் வழங்க வேண்டும். கோவில் மற்றும் நகர் பகுதிகளில் மின் கேபிள்கள் முறையாக பராமரிக்க வேண்டும். திருவிழா நாட்களில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 




தீபத் திருவிழாவை முன்னிட்டு 12 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை அனைத்தும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை. கிரிவல பாதையில் இரு சக்கர வாகனத்தை கூட இயக்கக்கூடாது. அரசு கலைக் கல்லூரி அருகே நடைபெறும் கால்நடை சந்திக்கு 4 ஆயிரம் மாடுகள், குதிரைகள் வரக்கூடும். கால்நடைகளை கொண்டு வருவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். மாட வீதி மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும். திருவண்ணாமலை நகராட்சி மட்டுமின்றி மற்ற நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 




 


சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் வெளியிடும் போது இணையதளம் முடங்காமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம். இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரக்கூடிய பக்தர்களுக்கு வருவதற்கு வசதியாக சுமார் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை ஆட்டோவில் வரக்கூடிய பக்தர்களுக்கு கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். விழாவின் 7-ம் நாளில் பஞ்ச மூர்த்திகள் வலம் வரும் 5 மரத்தேர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாததால் மரதேர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 முறை ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்க வேண்டும்.கார்த்திகை தீபத்தின் போது மலையின் மீது கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் 2 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி அளிக்கப்படும். மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை கொண்டு வரும் பக்தர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து அதற்கு பதிலாக மஞ்சப்பை தர வேண்டும் என இவ்வாறு பேசினார்.