திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று நம்பப்படுவதுண்டு. அப்படி, திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்ததில்லை. கடந்த புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.


 அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வரும் சூழல் இருப்பினும், பல மணி நேர காத்திருப்பிற்கு பிறகு தெய்வத்தின் அருள் கிடைக்கிறது என்ற திருப்தியுடன் பக்தர்கள் நினைப்பதுண்டு. திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். இதற்காகு டோக்கன் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. 


இந்த நிலையில், திருப்பதி திருமலையான் பகவானை தரிசிக்க மீண்டும் ’டைம் ஸ்லாட்’ டோக்கன் முறை வழங்கப்படும் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏவி தர்மாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியாதவது, “திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ம் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ’டைம் ஸ்லாட்’ டோக்கன் வழங்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக மீண்டும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ’டைம் ஸ்லாட்’ டோக்கன் வழங்க அறங்காவலர் குழு கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்டது. 


இதன்படி, வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் ’டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அந்த டோக்கன்கள் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், ரயில் நிலையம் அருகிலுள்ள கோவிந்தராஜசாமி சத்திரம் - 2 ஆகிய இடங்களில் வழங்கப்படம் என்றும், அதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாரத்திற்கு எத்தனை டோக்கன்கள் :


வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். அதேபோல், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பக்தர்களின் வருகையை கொண்டு டைம் ஸ்லாட் டோக்கன் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


’டைம் ஸ்லாட்’ டோக்கன்களின் ஒதுக்கீடு செய்யப்பட்ட அன்றைய நாள் டோக்கன் முடிந்து விட்டால், பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகம் 2-க்கு சென்று சாமி தரிசனத்துக்காக தங்கள் முறை வரும் வரை காத்திருக்கலாம்.  காத்திருக்கும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வி.ஐ.பி. தரிசன நேரத்தை வரும் டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் காலை 8 மணியாக மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.