Kanchipuram Ekambaranathar Temple: 17 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நாளை வெகு விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஒரு முக்கிய நிகழ்வான 'விசேஷ சந்தி' இன்ற காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
'விசேஷ சந்தி'
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவதால், காஞ்சிபுரம் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சங்கராச்சாரியார் பங்கேற்பு
நாளை நடைபெறவிருக்கும் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபடவுள்ள 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுக்காக இந்த சிறப்பு 'விசேஷ சந்தி' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் அவர்கள் கலந்து கொண்டு சிவாச்சாரியார்களுக்கு அருளாசி வழங்கினார். அவர் சிவாச்சாரியார்களுக்குப் புது வஸ்திரங்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.
ஏன் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது ?
விசேஷ சந்தி நிகழ்வின் முக்கியத்துவம் கும்பாபிஷேக விழாவின் மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்றாக இந்த 'விசேஷ சந்தி' நிகழ்வு பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட உள்ள சிவாச்சாரியார்கள், வாழ்வில் முன்னேற்றம் அடையவும், பணியைச் செவ்வனே நிறைவேற்றவும், மூன்று முக்கியமானவர்களை வணங்குவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
அவர்கள் வணங்கும் அந்த மூன்று முக்கிய பிரிவினர். படைத்த கடவுள்,குல குருமார்கள், உடலைப் படைத்த தாய்-தந்தை மற்றும் முன்னோர்கள். இந்த வழிபாட்டின் மூலம் சிவாச்சாரியார்கள் தங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்திக் கொண்டு, கும்பாபிஷேகப் பணிகளுக்குத் தயாராவதாகக் கூறப்படுகிறது.
சர்வ தீர்த்தக் குளத்தில் சிறப்பு வழிபாடு
சர்வ தீர்த்த குளத்தின் படித்துறையில் அமர்ந்த சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் படகு மூலம் குளத்தில் உள்ள மண்டபத்தை அடைந்து அதனைச் சுற்றியும் வந்து சிறப்புச் சடங்குகளை நிறைவேற்றினர். இந்நிகழ்வானது பக்தர்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் ஒரு புனிதமான காட்சியளித்தது.
நாளை கும்பாபிஷேகம்
நாளை ஏகாம்பரநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், பக்தர்களுக்கான வசதிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.