Golden Chariot: "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத் தேர் வெள்ளோட்டம், சங்கராச்சாரியார் கொடியசைத்து துவக்கி வைத்தார்."
புதிய தங்கத் தேர்
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்திற்கு உரியதாகப் போற்றப்படும் பெருமைக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்காகச் செய்யப்பட்ட புதிய தங்கத் தேரின் வெள்ளோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து வெள்ளோட்டத்தைத் துவக்கி வைத்தார்.
ஏகாம்பரநாதர் கோவிலுக்குத் தங்கத் தேர் இருக்க வேண்டும் என்று பல பக்தர்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அவரது உத்தரவின்படி, 'ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, தங்கத் தேர் உருவாக்கும் பணி நடைபெற்றது.
தேரின் சிறப்பம்சங்கள் - Key Features of Golden Chariot
இந்தத் தங்கத் தேர் சிற்பக்கலையின் அற்புதமாக விளங்குகிறது. தேரின் உயரம் 25 அடியாகவும், அகலம் 10 அடியாகவும், நீளம் 13 அடியாகவும் உள்ளது. தேர் மொத்தம் 5 அடுக்குகளைக் கொண்டது. இதில் பிரம்மா தேரை ஓட்டுவது போன்ற கலைநயம் மிக்க வடிவமைப்பு உள்ளது. 1600 கன அடி பர்மா தேக்கு மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு டன் தாமிரத்தின் மீது தங்க ரேக்குகள் ஒட்டப்பட்டு தேர் செய்யப்பட்டுள்ளது. தேரின் நான்கு மூலைகளிலும் 8 கந்தர்வர்கள், 16 நந்தி சிலைகள், நான்கு குதிரைகள் மற்றும் நான்கு சாமரப் பெண்கள் உள்ளிட்ட சிற்பங்கள் நுணுக்கமான கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தங்கத் தேரானது, காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை மகா ஸ்வாமிகள் மணிமண்டபத்தில் வைத்து 30-க்கும் மேற்பட்ட சிற்பிகளால் உருவாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தங்கத் தேர் வெள்ளோட்டம் - Golden Chariot
இன்று நடைபெற்ற வெள்ளோட்டத்தில், ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் இருந்து தங்கத் தேர் தனது முதல் பயணத்தைத் துவக்கியது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து வெள்ளோட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். தங்கத் தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏகாம்பரநாதர் கோவிலை நோக்கிச் சென்றது.
பொதுமக்கள் திரண்டு தரிசனம்
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்து, தங்கத் தேரின் தரிசனத்தைக் கண்டனர். பொதுமக்கள் மலர் தூவி தேரை வரவேற்றனர். நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தங்கத் தேரைக் கண்ணாரக் கண்டனர். இந்த வெள்ளோட்டத்தின் போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவ வாத்தியங்கள் இசைத்தபடி சென்றது விழாவிற்கு மேலும் ஆன்மீகச் சிறப்பு சேர்த்தது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஏகாம்பரநாதர் இறைப் பணி அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். வெள்ளோட்டத்தின் பாதுகாப்புப் பணியில், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி மாணவர்கள், தீயணைப்புத் துறை, காவல்துறை, மின்வாரியம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் எனப் பலரும் ஈடுபட்டிருந்தனர்.