காஞ்சிபுரம் கோயில் நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட ராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், உலகளந்தார் பெருமாள் கோயில் என நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி படையெடுப்பது வழக்கமாக உள்ளது. 







இது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் கோயில்களும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாக உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜம் கோயில், திருவலங்காடு தேவாரம் கோயில், திருத்தணி முருகர் கோயில், கோவிந்தவாடி அகரம் குரு பகவான் கோயில் ஆகியவையும் பிரசித்தி பெற்ற கோவில்களாக உள்ளன. 





புதியதாக வருபவர்களுக்கு சிக்கல்..





காஞ்சிபுரத்தில் அதிகமாக கோயில்கள் இருப்பதால், முக்கிய கோவில்களை ஒரே நாளில் பார்ப்பது கூட, பக்தர்களுக்கு கடினமான விஷயமாக உள்ளது. எனவே நீண்ட காலமாக முக்கிய கோயில்களில் ஒரே நாளில் தரிசிப்பதற்கான தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. 





அந்த வகையில் சமீபத்தில் ஒன்பது நவகிரக கோயில்களை கும்பகோணம் புறப்பட்டு சென்று ஒரே நாளில் தரிசித்து வருவதற்கான, ஏற்பாட்டினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. 





புதிய முயற்சி 





பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்வதற்கான பேருந்து வசதியை ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் அந்தப் பேருந்து  பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 





ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா 





காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி இந்த ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மீக சுற்றுலா மூலம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடக்கிய முக்கிய கோவில்களை ஒரே நாளில் பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 





எந்தந்த கோயில்கள் 


காலை 7 மணி அளவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பேருந்து புறப்பட உள்ளது. முதலில் காலை 7:20 மணியளவில்  வரதராஜ பெருமாள் கோயிலை சென்றடையும். இதனைத் தொடர்ந்து 8:35 மணி அளவில் அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைய. தொடர்ந்து பத்து மணியளவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலை சென்றடையும். இதற்கிடையில் தேநீர் இடைவெளிக்காக பேருந்து குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்படும். 







இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் உள்ள மிகவும் பிரசித்து பெற்ற கோவிந்தபாடி அகரம் குரு பகவான் கோயிலுக்கு 11:30 மணி அளவில் சென்றடையும், தொடர்ந்து மதிய உணவு இடைவேளை முடித்த பிறகு, திருவள்ளூர் மாவட்டம் அறுபடை கோயில்களில் ஒன்றாக உள்ள திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோவிலில் மதியம் 1:45 மணி அளவில் சென்றடைய உள்ளது. இதன் பிறகு திருவலங்காடு தேவார சிவ ஆலயத்திற்கு மதியம் 3:30 மணி அளவில் சென்றடையும். இதன்பிறகு திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில் மாலை வேளையில் சென்று அடைந்த பிறகு, மாலை 6:45 மணி அளவில் ராமானுஜர் கோவிலுக்கு சென்றடையும் இதன் பிறகு இறுதியாக மீண்டும் இரவு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து அடையும். 





கட்டணங்கள் சிறப்பம்சங்கள் என்ன ?





இதற்கான முன்பதிவுகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும். WWW.tnstc.in என்ற இணையதளம் முகவரிக்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். பெரியவர்களுக்கு பேருந்து கட்டணமாக 650 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 325 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணத்தின் பொழுது கோயில்கள் குறித்து எடுத்து கூறுவதற்கு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உடன் வருவார். பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர்,  பிஸ்கட், தேநீர் போன்றவைகளின் வழங்கப்பட உள்ளன.