காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உலகளந்தார் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.


 


கோயில் நகரம் காஞ்சிபுரம் 


கோயில் நகரமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் சிவன், விஷ்ணு, அம்மன், முருகன் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் உள்ளதால் வருடம் முழுவதும் திருவிழாக்களால் நிறைந்திருக்கும். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்கள் என அழைக்கப்பட கோயில்களும் இருக்கின்றன. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய உலகளந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.


உலகளந்த பெருமாள் கோயில் - காஞ்சிபுரம் 


108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய, காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் மூலவர் சிலை பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பெருமாள் சுமார் 35 அடி உயரமும், 24 அடியும் அகலம் கொண்ட பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். தனது இடது காலை விண்ணை நோக்கி தூக்கியும், வலது காலை பூமியில் வைத்தவாறு காட்சியளிக்கிறார். பெருமாள் சன்னதி அருகே, ஆதிசேஷன் சேவை சாதிக்கிறார். 


 


தல வரலாறு கூறுவது என்ன ?


மகாவிஷ்ணுவிற்கு 10 அவதாரங்கள் என புராணங்கள் கூறுகின்றன. அசுர மன்னன் மகாபலி என்பவன் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவர்கள் திருமாலிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து திருமாலிடம் முறையிட்டனர். 


மகாபலி ஒரு காலத்தில் மிகப்பெரிய யாகத்தை மேற்கொண்டு வந்தான். அப்பொழுது யாகத்தில் கலந்து கொள்ள, வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானங்களை வாரி வழங்கி வந்தான். அப்படி தானங்கள் வழங்கினால்தான் யாகம் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னரிடம், தான் தியானம் செய்வதற்கு இடம் வேண்டும் என மகாபலி இடம் கோரிக்கை வைத்தார். 


எவ்வளவு இடம் வேண்டும் என கேட்டதற்கு, சிறுவன் வடிவில் வாமனன் அதைத்தானே தனது கால்களால் மூன்று அடி அளந்து எடுத்துக் கொள்வதாக கூறினார். மகாபலி இதற்கு ஒப்புக்கொண்டார். உடனே திருமால் பிரம்மாண்ட உருவம் எடுத்தார் . முதல் அடியில் கீழ் உலகத்தையும், இரண்டாவது அடியில் மேல் உலகத்தையும் அளந்தார். மூன்றாவது அடி அளக்க இடமில்லை என மகாபலியை பார்த்து திருமால் கேட்க, எனது தலை இருக்கிறது என தலையை கொடுத்தார். இதன் மூலம் மூன்று உலகத்தையும் மீட்டு தேவர்களிடம் திருமால் ஒப்படைத்தார்.


கோயில் வரலாறு 


மூன்றாம் நந்திவர்மன் காலத்து கல்வெட்டு கோயிலில் கிடைத்திருப்பதால், குறைந்தது இந்த கோயில் 1200 ஆண்டுகள் பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழனால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.‌ முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் , அவர் கோயிலுக்கு வந்து நிலம் வழங்கியது குறித்த கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் ராஜாதி ராஜா சோழன், மூன்றாம் இராஜராஜ சோழன் ஆகியோர் கல்வெட்டுகளும் உள்ளன. இது போக தமிழ்நாட்டை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் என கருதக்கூடிய சம்புவராயர் ஆட்சிக்காலத்திலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன ‌‌


 




 


கும்பாபிஷேகம் பெருவிழா 


காஞ்சிபுரம் உலகளந்தார் பெருமாள் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்பொழுது பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை காலை ( 28-08-2024 ) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது யாகங்கள் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது . நாளை காலை 10:30 மணியில் இருந்து 11:30 மணிக்குள்ளாக இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது . இதில் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.