மதுரை மேலூருக்கு உட்பட்ட அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில் வளாகத்தில் ராஜகோபுரத்திற்கு இன்று காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கள்ளழகர் திருக்கோவில் ராஜகோபுரத்தின் கீழே காவல் தெய்வமான 18-ஆம் படி கருப்பணசாமி வீற்றிருக்கிறார். நேற்று முன்தினம் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மங்கள இசை முழங்க யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கியது.
கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஆல்பம் காண இங்கே கிளிக் செய்யவும் - விமர்சையாக நடைப்பெற்ற கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா!
இந்தராஜகோபுரம் திருப்பணிகள் சுமார் ரூ.1.5 கோடி திட்ட மதிப்பீட்டில் விரிவான புனரமைப்பு பணிகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேற்கொள்ளப்பட்டு பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் வண்ணம் தீட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. (இதுவரை மராமத்து மட்டும் அவ்வப்போது கோபுரத்தில் பார்க்கப்பட்டது) ராஜகோபுரத்தில் 628 சிற்பங்களை தாங்கி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சுமார் 120 அடி உயரம் கொண்ட இத்திருக்கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளை கொண்டது. ராஜ கோபுரத்தின் கலசம் ஆறரை அடி உயரம் கொண்ட ஏழு கலசங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பழமை மாறாமல் சிமெண்ட் பூச்சுகள் இல்லாமல் கருப்பட்டி, கடுக்காய் சுண்ணாம்பு உள்ளிட்டவை அரைத்து பயன்படுத்தி ராஜகோபுரம் புனரமைப்பு செய்யப்பட்டது. இது அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் ராஜகம்பீரமாக இந்த கள்ளழகர் கோவில் ராஜகோபுரம், காட்சி தருகிறது. ஆலயத்தில் 4 கால யாகசாலை மற்றும் பூரணஹதி பூஜை முடிவு பெற்று கடம் புறப்பாடு துவங்கி தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க, கோவில் யானை சுந்தரவள்ளி முன்னே செல்ல ஆலய உட்பிராகத்தை வலம் வந்தனர்.
முன்னதாக சுமார் 40 பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, 8 யாக குண்டத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க அழகர்கோவில் ராஜகோபுரத்தின் மேல் உள்ள 7 கலசங்களில் புனித நீர் ஊற்றப்படது. கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து தனியார் நிறுவனம் மூலம் ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரத்திற்கு பூக்கள் தூவப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்த வரையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம் , கோவில் துணை ஆணையர் ராமசாமி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ’ - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!