இஸ்கான் வட-சென்னை அதன் 9-வது வருடாந்திர ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் ரத யாத்திரை விழா (வெள்ளிக்கிழமை) நேற்று கொண்டாடியது. 


அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ISKCON), வட-சென்னை, 9வது வருடாந்திர ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் ரத யாத்திரை விழாவை 14 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை கொண்டாடியது. இதுதொடர்பாக இஸ்கான் வெளியிட்ட அறிக்கையில்,”ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் கிருஷ்ணரது பெருமைகளை பரப்ப விரும்பிய இஸ்கானின் ஸ்தாபக -ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதருக்கு இது அர்ப்பணிக்கப்பட்டது. ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய் ரத யாத்திரைக்கு நாங்கள் முன்னோடியாக இருப்பதால், இந்த ரத யாத்திரை திருவிழா இஸ்கான் - வட சென்னைக்கு தனித்துவமானது. பக்தர்கள் பொதுவாக ஜகன்நாதர் ரத யாத்திரை பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். இஸ்கான் வட-சென்னையில் கௌர நிதாய் விக்ரஹங்கள் உள்ளன, அவர்கள் வேறு யாருமல்ல, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமர். இந்தக் கலியுகத்தில் அவர்கள் பக்தர்களாகத் தோன்றி சங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்பினார்கள். 2015-ல் வடசென்னையில் ரத யாத்திரையைத் தொடங்கினோம்.” என இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. 




இந்த பிரம்மாண்ட விழாவிற்கு கெளரவ விருந்தினராக ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜாராம் அவர்கள் கலந்து கொண்டார்.வரவேற்பு உரை மாலை 3 மணியளவில் தொடங்கி, மாலை 4 மணிக்கு தேர் இழுத்தல் தொடங்கியது. பாரதி சாலையில் இருந்து புறப்பட்ட ரதம், பெரம்பூர் ஹைரோடு, பின்னர் பேப்பர் மில்ஸ் சாலை, ரெடேரி சிக்னல், ரெட் ஹில்ஸ் சாலை வழியாகச் சென்று இறுதியாக பத்மஸ்ரீ சேஷ மஹாலை (லட்சுமிபுரம்) மாலை 6.30 மணியளவில் அடைந்தது.


இந்த ரதயாத்திரையின்  வழி நெடுகிலும் பெண்கள் ரங்கோலி இட்டனர். இது கண்களை கவரும் விதத்தில் இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரதத்தை இழுத்தனர், சில பக்தர்கள் பாடியும் நடனமாடியும் இருந்தனர். பத்மஸ்ரீ சேஷ மஹாலில், ஆரத்தி செய்யப்பட்டது. கல்யாண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ஸ்ரீல பிரபுபாத தியேட்டர்ஸ் வழங்கும் " அஜாமிளன்" நாடகம் நவீன தொழில் நுட்பத்துடன் அரங்கேற்றப்பட்டது. மண்டபத்தில் கூடியிருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.