தஞ்சாவூர்: காரியத்தடை நீங்க கணபதிபூஜை எவ்வளவு முக்கியமோ நம் துன்பங்கள் நீங்கிட துர்க்கை வழிபாடு மிக அவசியம் என்று தெரியுமா?. அப்படி துர்க்கைக்கு உகந்த நாள் எது தெரியுங்களா? துர்காஷ்டமிதாங்க . சரி? துர்க்கை அம்மனை எப்படி வழிபடணும். வாங்க தெரிஞ்சுக்கிட்டு வழிபடுவோம். 


9 நாட்கள் போர் நடந்தது எதற்காக?


நவராத்திரி விழாவில் 9 நாட்கள் மக்கள் கொலுவைத்து துர்க்கையை வழிபடுவதற்கான பின்னணியில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இருக்குங்க. துர்க்கை அவதரித்த நாளே நவராத்திரி ஆகும். சும்பன், நிசும்பன் என்ற இரண்டு அரக்கர்கள் 25 வருடங்களாக கடும் தவம் இருந்து பிரம்மதேவரிடம் சாகாவரம் வாங்கறாங்க. எப்படி? எங்களுக்கு அழிவென்றால் ஒரு கன்னிகையினால் மட்டுமே வரவேண்டும் என்று. வரம் கிடைத்த அகம்பாவத்தில் தேவர்களையும், மனிதர்களையும் சித்ரவதை செய்து இன்பம் அடைகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று பிரம்மா , விஷ்ணு, சிவன் ஆகியோர் பார்வதி தேவியை நாட, துர்க்கையாக உருவெடுத்த பார்வதி தேவி சும்பன், நிசும்பனை வதம் செய்துவிட்டு இவர்களின் தலைவனான மகிஷாசுரனை கொல்கிறார். இதற்காக போர் நடந்தது எத்தனை நாட்கள் தெரியுங்களா? 9 நாட்கள் போர் நடந்துள்ளது.




 
மகிஷாசுரனை வீழ்த்தி கொன்ற துர்க்கை


ஒன்பது நாட்களிலும் காலை முதல் மாலை வேலைகளில் மட்டுமே போர் நடக்கும். போர் முடிந்தவுடன் துர்க்கையை மகிழ்விக்க போர் நடந்த இடத்திலேயே துர்க்கைக்கு சிறப்பு பூஜைகளும் அத்துடன் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளது. ஒன்பதாம் நாள் போர் முடிவில் மகிஷாசுரனை துர்க்கை வீழ்த்தி கொல்ல அந்த நாள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழா கொண்டாடுவதானால் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதியை வணங்குவதால் கல்வி, செல்வம், இன்பம் , ஞானம் ஆகியவை ஒரு சேர கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாது ஐதீகம்.


துக்கமெல்லாம் போக்குபவர் துர்க்கை அம்மன்


துர்க்கை அம்மன், பார்வதியின் வடிவங்களில் ஒன்றாகும். துர்க்கை என்றால் துக்கமெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். சிவாலயங்களிலும், அம்மன் கோவில்களிலும் உள்ள துர்க்கையை சிவதுர்க்கை என்றும், பெருமாள் கோவில்களில் உள்ள துர்க்கையை விஷ்ணுதுர்க்கை என்றும் போற்றுகிறோம். துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும், நம்முடைய துன்பங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.


நவராத்திரியில் கொலு வைக்கும் முறை


நவம் என்றால் புதுமை மற்றும் ஒன்பது என்று இரண்டு பொருள்கள் உள்ளன. ராத்திரி என்றால் ‘இரவு’ என்று பொருள்படுவதால் அதனையே நவராத்திரி என்று அழைக்கிறோம் . இந்த ஒன்பது நாட்களும் மூன்று தேவிகளையும் வழிபட்டு பத்தாவது நாளன்று ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியில் பலரது வீட்டிலும் கொலு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 3, 5, 7, 9, 11 என்ற ஒற்றைப்படை எண்களின் அடிப்படையில் கொலு படிகள் அமைப்பது வழக்கம். முதற்படியில் ஓரறிவு கொண்ட மரம், செடி, கொடிகளையும், இரண்டாம் படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கையும், மூன்றாம் படியில் கரையான், எறும்பு, நான்காம் படியில் நண்டு, வண்டு, ஐந்தாம் படியில் பறவை, விலங்கு உள்ளிட்ட 5 அறிவு படைத்த ஜீவராசிகளையும், ஆறாம் படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் தொடர்புடைய பொம்மைகளையும், ஏழாம் படியில் வள்ளலார், பட்டினத்தார் போன்ற மகான்கள் அல்லது ஞானிகளையும்,, எட்டாவது படியில் அஷ்டலக்ஷ்மிகள், தசாவதாரம் போன்ற பொம்மைகளையும், ஒன்பதாவது படியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளையும் வைப்பதே கொலுவின் முறையாக பின்பற்றப்படுகிறது.