தஞ்சாவூர்: அயோத்தி ராமா் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடந்தது.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பலரும் இந்த ராமர் கோவிலுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கியுள்ளனர்.
ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் தயாராகும் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டுமானத்தில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் வேலை செய்து வருகின்றனர். அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயில் குடமுழுக்கு 2024, ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் என ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிா்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, காவிரி உள்பட பல்வேறு பகுதிகளிலுள்ள 21 நதிகளிலிருந்து புனித நீா் 3 கடங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அயோத்தி ராமா் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து 21 ஆறுகளின் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடந்தது. கும்பகோணம் காசி விஸ்வநாதா் கோயிலில் இந்தக் கடங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகாமக குளத்திலிருந்து புறப்பாடு நடைபெற்றது.
சூரியனாா்கோவில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், கும்பகோணம் மேயா் க. சரவணன் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, கடங்கள் புறப்பாட்டை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி தஞ்சாவூா் கோட்டத் தலைவா் சிவகுமாா் தலைமையில் அகில பாரத இந்து ஆன்மிக பேரவையின் மாநிலப் பொதுச் செயலா் இரா. கண்ணன், அனுமன் சேனா நகரத் தலைவா் பிரபாகரன், ஒன்றியத் தலைவா் அருணகிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புனிதநீா் யாத்திரை குழுவின் தலைவரும், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநிலப் பொதுச் செயலருமான கா. பாலா கூறுகையில், 21 நதிகளிலிருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு, காசி விஸ்வநாதா் கோயிலிலும், மகாமக குளத்திலும் பூஜைகள் செய்யப்பட்டு, புறப்பாட்டை தொடங்கியுள்ளோம்.
தொடா்ந்து ராமேசுவரத்துக்கு சென்று, அக்கோயிலில் புனித நீா் கடத்துக்கு பூஜை செய்யப்படும். அங்கிருந்து ரயில் மூலம் அயோத்திக்கு சென்று, ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிா்வாகிகளிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்றார்.