நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


இந்த திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து குடில்கள் அமைத்து குடும்பத்துடன் தங்கி பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல் என்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபாடு செய்வார்கள். ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா போல் நடைபெறும். ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். மேலும் பலர் திருவிழா தொடங்கியதும் வந்து அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்து திருவிழா முடிந்ததும் செல்வர். இந்த நிலையில் இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழாவானது ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கி ஆக. 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான கால்நாட்டு விழா வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில், கூறியதாவது தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை, மாற்று ஏற்பாடாக அகஸ்தியர் பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் வாகனங்களை நிறுத்தி விட்டு அரசு பேருந்துகளில் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பக்தர்கள் கோவிலுக்கு வரும் பொழுது பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வர அனுமதி இல்லை. வனத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள், ஆயுதங்கள், கூரிய கத்திகள், மதுபாட்டில்கள் மற்றும் இதர தடை செய்யும் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது, வனத்திற்குள் தீ ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை.




பக்தர்கள் அரசு வாகனங்களில் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர், வனப்பகுதியில் மண்வெட்டி மற்றும் இதர ஆயுதங்களை கொண்டு சென்று சுத்தம் செய்து கூடாரம் அமைக்க அனுமதியில்லை. கோயில் வளாகத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்த குத்தகைகாரர்கள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்ய கூடாது, காகிதப்பைகள் மற்றும் துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும், கடைகளில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சூதாட்ட அட்டைகள், போதைபாக்குகள், பிளாஸ்டிக் கப், தட்டு, கவர்கள், பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்யக்கூடாது. காட்டுப்பறவைகளின் நலன் கருதி பிராய்லர் கோழிக்கடை வைக்க அனுமதியில்லை, ஆற்றில் குளிக்கும் பக்தர்கள், சிறுவர்கள், அபாயகரமான ஆழமான பகுதியில் குளிப்பதற்கு செல்லக்கூடாது. குப்பைகளை ஆங்காங்கே கொட்டாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போட வேண்டும், விஐபி, விவிஐபி கார் பாஸ்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 14.08.23 முதல் 18.08.23 வரை மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவிற்கு பயணிகள் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது வனத்துறை..




இது குறித்து கோவில் பக்தர்கள் சுடலையாண்டி என்பவர் கூறும் பொழுது, ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். வனத்துறையின் ஒரு சில  கட்டுப்பாடுகள் வனத்தை பாதுகாக்கும் நோக்கோடு இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் உள்ளோம்.. வழக்கமாக இந்த திருவிழாவிற்கு 10 நாட்கள் அனுமதியளிக்கப்பட்டு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி 10 நாட்கள் விரதமிருந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி செல்வர்.  ஆனால் கடந்த ஆண்டு 5  நாட்கள் மட்டுமே  அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு 3 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவிற்கு பின் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி என அனைத்து இடங்களுக்கும் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வேண்டும் என்றால் கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி. அகஸ்தியர் அருவிக்கு செல்ல வேண்டும் என்றால் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களில் செல்பவரும் சோதனை சாவடியில்  பணம் கட்டிவிட்டு தான் செல்ல வேண்டும், இதனால் விடுமுறை நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர். பணம் வசூல் செய்யும் நோக்கோடு செயல்படும் வனத்துறையினர் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என்ற  குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றனர்.