தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி திருத்தலம் பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்வோம்.
தல மூர்த்தி
கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்) தல இறைவி : வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி) தல தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம் கிரகம் : சூரிய ஸ்தலம் தலவரலாறு: கோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத நூல்களை அபகரித்துச் சென்றான். இதனால் பிரம்மனின் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. பிரம்மா மனம் வருந்தி, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்தார். இதனைக் கண்ட பெருமாள், பிரம்மனுக்கு காட்சி தந்தார். பிரம்மனின் வேண்டுதலை ஏற்று கோமுகாசுரனை அழித்து வேத சாஸ்திரங்களை மீட்டுத் தந்தார். பிரம்மனின் வேண்டுகோளின்படி இங்கேயே வைகுண்டநாதர் என்ற பெயருடன் எழுந்தருளினார். பிரம்மனும் தாமிரபரணி தீர்த்தத்தினை எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வித்த காரணத்தாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவியதாலும் கலச தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்பு இக்கோயில் வழிபாடுகளின்றி, பூமிக்குள் புதையுண்டு கிடந்தது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் மறைந்திருந்தது. இச்சமயத்தில், அரண்மனை மாடு, மேய்ச்சலுக்கு செல்லும் போது தினமும், அங்குள்ள ஒரு புற்றின்மேல் பாலை சுரந்துகொண்டு இருந்தது. இதனை அறிந்த பாண்டிய மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்தார். அங்கே சுவாமி சிலை இருப்பதைக் கண்டு, புதையுண்டு கிடந்த திருக்கோயிலையும் புனர் நிர்மாணம் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்தார். பாண்டிய மன்னர் பால் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்தமையால் பெருமாளுக்கு பால் பாண்டி என்ற பெயரும் உண்டானது.
ஸ்தல பெருமை
நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். கையில் தண்டத்துடனும், ஆதி சேஷனைக் குடையாகவும் கொண்டு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, கோயிலின் கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்தலச்சிறப்பு
வைகுண்டநாதப் பெருமாளின் பக்தர் காலதூஷகன் என்ற திருடன். இந்த காலதூஷகன் பல இடங்களில் திருடியவற்றில் பாதியை கோயில் சேவைக்கும், மீதியை மக்கள் சேவைக்கும் செலவிட்டான். ஒருமுறை மணப்படை என்ற ஊரில் அரண்மனைப் பொருள்களை திருடச்சென்ற போது காலதூஷகனின் ஆட்கள் அரண்மனை காவலர்களிடம் பிடிபட்டார்கள். அவர்கள் மூலம் காலதூஷகனின் இருப்பிடம் அறிந்த காவலர்கள், அவனை சிறை எடுக்கச் சென்றனர். அப்போது தானே திருடன் வடிவில் வைகுந்தப் பெருமாள் அவர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். அவரை விசாரித்த அரசரிடம், வயிற்றுக்கு இல்லாத குறைதான் திருடினேன் எனவும், நாட்டில் ஒருவனுக்கு உணவு, பொருள் பற்றாக்குறை என்றால் அதற்கு, அந்நாட்டை ஆளும் மன்னன் சரியான விதத்தில் அரசாளவில்லை என்றுதான் அர்த்தம். எனவே தான் திருடியதற்கு மன்னனே காரணம் என்று தைரியமாக கூறினார்.
இவ்வாறு தன் முன் நின்று ஒரு திருடனால் தைரியமாக பேச முடியாது என்பதை உணர்ந்த மன்னன், வந்திருப்பது பெருமாளே என அறிந்தார். தான் செய்த தவறையும் உணர்ந்தார். பெருமாள் திருடனது வடிவில் வந்தாலும் அனைவரையும் மயக்கும் அழகிய தோற்றத்தில் இருந்த படியால் அன்று முதல் கள்ளபிரான் என்று அழைக்கப்பட்டார். தை முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி, கொடிமரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து, ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர். 108 திவ்ய தேசங்களிலும் உள்ள அனைத்துப் பெருமாளும் இந்த தினத்தில் கள்ளபிரானாக பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம்.