அனுமன் ஜெயந்தி

 

அனுமன் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தியாக இந்துக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிவரும் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் 23ம் தேதி மார்கழி மாதம், அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிவரும் நாளில் அனுமன் ஜெயந்தியானது அனைத்து அனுமன் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் அனுமனுக்கு  விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும் என்பது ஐதீகம்.



 

காஞ்சிபுரத்தில் அனுமன் ஜெயந்தி

 

அந்தவகையில் ஆயிரம் கோயில்களை கொண்ட கோயில் நகரமானதும், புண்ணிய நகரமானதுமான காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அனுமன் கோயில்களிலும், வைணவக் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தியானது இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டையிலுள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு மலர்மாலைகள் சாத்தப்பட்டு, சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு  காட்சியளித்தார். அதையொட்டி ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை பயபக்தியுடன் வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



 

பிறந்தநாளன்று விரதம் இருப்பது மகிமையை தரும் -- விரதம் கடைப்பிடிப்பது எப்படி?

 

நினைத்தவைகள் கை கூட, அனுமன் பிறந்தநாளன்று விரதம் இருப்பது பல மகிமையை தரும் வல்லமை படைத்தது. அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, ராம நாமம் சொல்லி அனுமனை வணங்க வேண்டும். அன்றைய தினம் உணவருந்தாமல், விரதம் இருக்க வேண்டும்.  அருகில் இருக்கும் ராமர், அனுமன் கோவிலுக்குச் சென்று அனுமனுக்கு துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலை கொடுத்து வழிபடலாம்.



 

வீட்டில் உள்ள அனுமன் படத்தை பொட்டு வைத்து வழிபடலாம். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை படைக்கலாம். முழு நேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள், மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும். மறுநாள் காலையில் துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்ய  வேண்டும் .