கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி, அமராவதி ஆறுகளில் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள் ஆறுகளில் இன்று கரைக்கப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில், இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் கரூர் வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம், அரவாக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை என பல்வேறு மாவட்டத்தின் பகுதிகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அலங்காரம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் முன்பாக இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.




தொடர்ந்து நந்தினி பஜனை குழுவினரின் பஜன், ஆடல் வள்ளான் நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, சேவா பாரதி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் நடத்திய வினாடி வினா நிகழ்ச்சி, நடனஞ்சலி நாட்டியாலயா குருவி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அனைத்து பகுதிகளிலும் அன்னதானம் நடந்தது. மாவட்டம் முழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில்  ஒரு சிலை மட்டும் ஆற்றில் கரைக்கப்பட்டன. மாவட்டத்தில் 143 விநாயகர் சிலைகள் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் கரைக்கப்பட்டன.




கரூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கரூர் 80 அடி சாலைக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார் தலைமையில்  ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆகியோர் பேசினர். இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கூத்தன், பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார்.




கரூர் மாவட்டத்தில் இன்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 140-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் கரைக்கப்பட உள்ளன. இதுபோல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வாங்கி வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகளை அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் நேற்று கரைத்தனர். வேலாயுதம்பாளையம் இந்து முன்னணி சார்பில் மலை வீதி, காந்திநகர், முல்லை நகர் உட்பட 27 இடங்களிலும் பொதுமக்கள் சார்பில் சுற்று வட்டார பகுதிகளில் 11 இடங்களிலும், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இன்று கரைக்கப்பட உள்ளன.




க.பரமத்தி வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 30 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு யாகம் பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் ஒவ்வொரு சிலையும் வாகனத்தில் க.பரமத்திக்கு எடுத்துவரப்பட்டது. ஊர்வலமாக தவிட்டுப்பாளையம் சென்று அங்குள்ள காவிரியில் அனைத்து சிலைகளும் விசர் ஜனம் செய்யப்பட்டதாக இந்து முன்னணியில் தெரிவித்தனர். க.பரமத்தியில் புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தை ஓய்வு பெற்ற ஐஜி பாரி தொடங்கி வைத்தார். பாஜக ஒன்றிய தலைவர் தங்கவேல், அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் குமார், பரமத்தி குணசேகரன், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.