விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள மராட்டிய கால விநாயகருக்கு 10 கிலோவில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற பெரியகோயிலின் திருச்சுற்றில் பின்புறம் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது இச்சன்னதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் விமரிசையாக செய்யப்பட்டது.


அதன் பின்னர் நின்றுபோன சந்தனக் காப்பு அலங்காரம் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2018ம் ஆண்டில் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, 5 அடி உயரமுள்ள இந்த விநாயகருக்கு 10 கிலோ சந்தனம் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல, பெருவுடையார் சன்னதி அருகேயுள்ள இரட்டை விநாயகருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.





மேலும், தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில், தொப்புள் பிள்ளையார் கோயில், மகர்நோன்புசாவடி ஜோதி விநாயகர் கோயில், மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் உள்ள விநாயகர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

11 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்

கும்பகோணம் பகவத் விநாயகர் ஆலயத்தில் 11 லட்சம் ரூபாய் நோட்டுகளால் குபேர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள புகழ்பெற்ற பகவத் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக உற்சவ விநாயகர் 11 லட்சம் ரூபாய் நோட்டுகளால் குபேர விநாயகராக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இந்திய ரூபாய் நோட்டுகளுடன் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாட்டு ரூபாய் நோட்டுகளும் சிறப்பு அலங்காரத்தில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பகவத் விநாயகர் ஆலயத்தில் திரண்டனர். மேலும் மூலவர் பகவத் விநாயகர் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விநாயகர் சிலை பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டம் ஆலக்குடி நால்ரோடு பகுதியில் பத்தாவது ஆண்டாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நேற்று விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 600க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி நால்ரோடு பகுதியில் 10வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழாக்குழு, காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, வழிபாடுகள் நடத்தப்பட்டன.


 





இதில் மகளிர் குழுவினர் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. பின்னர் மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. நாளை சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் மாலை விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புது ஆற்றில் விசர்ஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.