Vinayagar Chaturthi 2024: சேலத்தில், நீர் நிலைகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.. வழிபட குவிந்த மக்கள்..

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலம் மாநகரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மூக்கனேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

Continues below advertisement

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசார் அனுமதியுடன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்றைய தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

Continues below advertisement

சேலம் மாநகர பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியில் கரைக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைத்து மாநகர காவல் துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை, சேலம் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சிலைகளை நீரில் கரைத்தனர்.

விநாயகர் ஊர்வலம்:

இதனிடையே இந்து முன்னணி சார்பில் சேலம் மாநகரப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஸ்ரீ எல்லைபிடாரி அம்மன் கோயில் முன்பிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூக்கனேரியில் கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, ஊர்வலம் நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

சிலை கரைப்பு:

சேலம் மாநகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொதுமக்கள் வைத்துள்ள விநாயகர் சிலைகள் காலை 10 மணிக்குள் எடுக்க வேண்டுமென சேலம் மாநகர காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. சேலம் மாநகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியான கன்னங்குறிச்சி மூக்கணேரியில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் சிலைகள் நண்பகல் 12 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திட வேண்டும் என உத்திரவிடப்பட்டது.

இதேபோன்று, அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காலை 11.00 மணிக்குள் சிலை வைத்துள்ள பகுதிகளில் இருந்து எடுத்து ஊர்வலம் புறப்படும் இடமான எல்லைபிடாரி அம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு பாதையான எல்லைபிடாரி அம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

போக்குவரத்து மாற்றம்:

அதன்படி, சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி வரை செல்லும் வாகனங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா, பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா, நான்கு ரோடு, ராமகிருஷ்ணா ரோடு, சாரதா கல்லூரி சாலை வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

அஸ்தம்பட்டி முதல் மூக்கனேரி வரை செல்லும் வாகனங்கள் அஸ்தம்பட்டி, சேலம் நீதிமன்றம், மத்திய சிறை, மாவட்ட ஆட்சியர் பங்களா, ஐயந்திருமாளிகை வழியாக கன்னங்குறிச்சி செல்ல உத்தரவிடப்பட்டது. 

அஸ்தம்பட்டி முதல் பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் வாகனங்கள் அஸ்தம்பட்டி ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை, ராமகிருஷ்ணா ரோடு, நான்கு ரோடு, அண்ணா பூங்கா, பெரியார் மேம்பாலம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வழியாக பழைய பேருந்து நிலையம் செல்வதற்கு சேலம் மாநகர காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

Continues below advertisement