நெல்லை பாளையங்கோட்டை அருகே சொக்கலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான முறையில் விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் தனது வீடு அமைந்துள்ள தெரு பகுதியில் விநாயகர் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். ஆனால் தெருவில் சிலை வைக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. இருப்பினும் வீட்டில் வைத்து வழிபட எந்த ஆட்சேபணையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுடலையாண்டி வழக்கம் போல் இந்த ஆண்டும் வித்தியாசமான விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதாவது சுமார் நான்கு அடி உயரம் கொண்ட அந்த விநாயகர் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பந்தய களத்தில் சீறி வரும் ஜல்லிக்கட்டு காளையின் கொம்பை விநாயகர் தனது கையால் பிடித்து அடக்குவது போன்று இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை சுடலையாண்டி தனது வீட்டின் முன்பகுதிகள் வைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். வித்தியாசமான முறையில் இருக்கும் இந்த விநாயகர் சிலையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் ராஜகோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் விநாயகருக்கான தனித் திருக்கோயிலாகும். இங்கு விநாயகப்பெருமான் தனது 32 தோற்றங்களில் 8வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக நான்கு கரங்களுடனும் தனது இடப்பக்க மடியில் ஸ்ரீநீலவாணியை அமர்த்தியபடி அருள் பாலிக்கிறார். சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோவிலில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை விழா கடந்த 22 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாரதனையும், மாலையில் விஷேச அலங்கார தீபாரதனையும், அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் கோயில் பிரகார உலாவும், தீபாரதனைகளும் நடைபெற்றன. 10ம் திருநாளான இன்று சதுா்த்தி திதியில் அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. பூா்ணாகுதியை தொடா்ந்து உச்சிஷ்ட கணபதிக்கு மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், தயிா், கரும்புச்சாறு, பஞ்சாமிருதம், தேன், இளநீா், வீபூதி, சந்தணம் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வெள்ளி கவசம் சாற்றி ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தாா். சிறப்பு அலங்காரத்தில் கொலுவீற்றிருந்த மூலவா் உச்சிஷ்ட கணபதிக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தாிசனம் செய்தனா். மாலையில் வீதி புறப்பாடு நடைபெறுகின்றது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்