எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முடிய முதலில் வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான்.
ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொதுவாக விநாயகர் அவதரித்த திதி அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் அவதரித்த திதியே விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இந்தியா தொடங்கி பல அண்டை நாடுகள் உள்பட உலக நாடுகள் வரை கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாக்கள் பொதுவாக தெருவெங்கிலும் சுமார் ஒரு வார காலத்துக்கு களைகட்டும். விநாயகரை மூர்த்தி செய்து வழிபடத் தொடங்குவது முதல் கடலில் கரைப்பது வரை விழாக்கோலம் பூடும்.
குறிப்பாக வட இந்தியாவில் 10 நாள்களுக்கு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் விதம் குறித்து தெரிந்துகொள்வோம்.
முதலில் வீடு, கோயில் அல்லது பொது இடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டி செய்து மந்திரங்கள் ஓதி பூஜை செய்கின்றனர்.
பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம், வாசனை எண்ணெய்களால் விநாயகரைக் குளிப்பாட்டி அலங்கரித்து பாசுரங்கள் மந்திரங்கள் ஓதி வணங்குவர்.
பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாக்களில் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும், அனைத்து வயதினரும் பங்கேற்கின்றனர். குறிப்பாக வட இந்திய மக்கள் ஆடிப் பாடி பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றனர்.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை அடுத்து மூன்றாவது நாள் ஆரத்தி, மலர்களுடன் விநாயகருக்கு பிரியாவிடை அளித்து வழியனுப்பி வைக்கின்றனர்.
இறுதியாக நீர்நிலைகளில் விநாயகர் சிலையை மந்திர உச்சாடாணங்களுடனும் கரகோஷங்களுடனும் பயபக்தியுடன் கரைத்து விடை தருகின்றனர்.