Sashti Viratham Procedure: முருகக் கடவுளை மனமுருக வேண்டி கடைபிடிப்பதுதான் சஷ்டி விரதம். இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ள சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றைக் காண்போம்.
மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.
வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள்கூட, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.
வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி (ஆவணி 17) கந்த சஷ்டி விரதம்(Kanda Sashti Viratham) வருகிறது.
கந்த சஷ்டி விரதம் எப்போது வரும்?
ஐப்பசி மாதத்துக்கு ஆயிரம் பெருமைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது சஷ்டி விரதம். முருகக் கடவுளை வழிபட உகந்த திதி. சஷ்டி. அதிலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி கந்த சஷ்டி என்று புகழப்படுகிறது.
சஷ்டி விரதம் கடைப்பிடிப்போர் குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க அவரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் வளர் பிறை தேய்பிறைகளில் சஷ்டி திதி வருவது வழக்கம். அப்படி ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டிக்கு மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.
ஆனால், விரதம் இருக்கும் அன்பர்கள் தங்களின் உடல் நிலையை கருத்தில் கொள்வது அவசியம். மருத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களும், உடல் நல பிரச்னை உள்ளவர்கள் இந்த தீவிர விரதத்தை யோசித்து முடிவு செய்யவும்.
விரதம் எப்படி இருக்க வேண்டும்?
சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தைத் தொடங்க வேண்டும். சிலர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள். சிலர் பால், பழம் மட்டும் அருந்தி விரதம் இருப்பார்கள்.
கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பர்.
சிலர் வீட்டிலேயே விரதத்தைக் கடைபிடிப்பர். மிகவும் வயதானவர்கள் முருகனின் அறுபடை வீடுகள் ஒன்றில் தங்கி விரதம் இருப்பார்கள்.
விரதம் மேற்கொள்பவர்கள் விரத காலம் முழுவதும் முருகக் கடவுளின் மந்திரங்களை பாராயணம் செய்தல், கந்த சஷ்டி வாசித்தல். முருகன் திருவிளையாடலை படித்தல். திருப்புகழ் வாசித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
சஷ்டி விரத பலன்கள் என்ன?
குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம்.