கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.


அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17-ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை சீசன் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் தரிசன நேரத்தை கூட மாற்றி திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு வெளியிட்டது. பொதுவாக விஷேச நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 10 மணிக்கு நடை மூடப்படும்.


ஐயப்பனை தரிசனம் செய்ய 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய் அபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படும்.


டிசம்பர் 27 ஆம் தேதி மிக முக்கியமான நிகழ்ச்சியான மண்டல பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


27 ஆம் தேதி மண்டல பூஜைக்கு பின் நடை மூடப்பட்டது. பின் டிசம்பர் 30 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு ஜோதி பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வை-ஃபை (wifi) சேவை வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனமும் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. முதல்கட்டமாக சன்னிதானம், நடைபந்தல், திருமுற்றம், மாளிகைப்புறத்தில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை அங்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.