கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை சீசன் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகப்படியான பக்தர்கள் வருகையால் சபரிமலை ஐயப்பன் கோயில் ஸ்தம்பித்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தரிசன நேரத்தில் மாற்றம் செய்தது. ஐயப்பனை தரிசனம் செய்ய 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய் அபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படும்.
ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் தினறி வருகின்றனர். தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருக்கு நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரயில் மற்றும் பேருந்துகளில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை தாம்பரம் முதல் கொல்லம் வரை இயக்கப்படுகிறது. வண்டி எண்: 06119/06120 (சபரி ஸ்பெஷல்) சிறப்பு ரயில் இயக்கபடுகிறது.
சபரி ஸ்பெஷல் ரயில் டிசம்பர் 16 ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து மதியம் 1.30 மணியளவில் புறப்பட்டு, டிசம்பர் 17 ஆம் தேதி காலை 6.45 மணிக்கு காட்பாடி, திருப்பூர், பாலக்காடு, ஆலுவா, எர்ணாகுளம்,கோட்டயம், செங்கனூர் வழியாக கொல்லம் சென்றடைகிறது. அதேபோல் டிசம்பர் 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு, டிசம்பர் 18 ஆம் தேதி காலை 5.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் 3 ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் 2, படுக்கை வசதியுள்ள ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் 5 உட்பட 19 பெட்டிகள் கொண்டு இயக்கபடுகிறது.