உலக புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியையொட்டி ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

 

சனியால் கடுமையான பாதிப்புகளத சந்திப்பவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலத்திற்கு சென்று வணங்கி வரலாம். இங்கு சிவன் அக்னீஸ்வரர் என்ற திருநாமத்துடனும், தாயார் மிருதுபாத நாயகி என்ற திருநாமத்துடனும் அருள் செய்கிறார்கள். இங்கு சிறிய விக்ரமாக, கையில் களப்பையுடன், பொங்கு சனியாக காட்சி தருகிறார் சனி பகவான். இந்த கோவிலில் சனி பகவான், தனது குருவான பைரவருக்கு எதிராகவும், மகாலட்சுமிக்கு அருகிலும் இருந்து காட்சி தருவது மற்றொரு தனிச்சிறப்பாகும். அதே போல் நவகிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்காமல் 'ப' வடிவத்தில் அமைந்திருப்பது மற்றொரு தனிச்சிறப்பாகும். திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் மிருதுபாதநாயகி சமேத அக்னிபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரர் ஆலயம் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக உலக பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது.இந்த ஆலயத்தின் குபேர மூலையில் கையில் ஏர் கலப்பையுடன் சனீஸ்வரன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிக்கிறார்.அவருக்கு நேர் எதிராக கால பைரவர் இருப்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும்.



 

நள சக்கரவர்த்தி திருநள்ளாற்றில் சனீஸ்வரனை வழிபட்டு சனி தோஷம் நீங்க பெற்றாலும் இந்த திருக்கொள்ளிக்காடு தளத்தில் வழிபட்ட பின்னர் தான் தனது நாட்டையும் அனைத்து செல்வங்களையும் இழந்த புகழையும் மீண்டும் பெற்றதாக கூறப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தலத்தில் தான் சனி பகவான், சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. அதே போல் சனி பகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டு நள மகராஜா அனைத்தையும் இழந்ததன் காரணமாக திருநள்ளாறு தலம் ஏற்பட்டதை போல், மீண்டும் சனி பகவானின் அருளால் இழந்த அனைத்தையும் நளன் பெற்ற தலம் திருக்கொள்ளக்காடு தலமாகும். இங்கு தற்போதும் அதர்வன வேத முறையிலேயே பூஜைகள் நடத்தப்படுகிறது. இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு சனி பகவான் மகிழ்ச்சியான நிலையுடன் நன்மைகளை வாரி வழங்கும் நிலையில் காட்சி தருவதாக ஐதீகம்.



 

வரும் டிசம்பர் 20ஆம் தேதி மாலை சரியாக 5:20 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சனீஸ்வர பரிகார ஹோமம் மற்றும் சனி பெயர்ச்சி லட்சார்ச்சனை போன்றவை வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது. சனிப் பெயர்ச்சியை பொறுத்தவரை பெயர்ச்சி ஆவதற்கு 10 நாட்களுக்கு முன்பும் பெயர்ச்சி அடைந்து 48 நாட்கள் வரையும் இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்துவது சிறப்பு என்று கூறப்படுகிறது. குறிப்பாக அந்தந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு உரிய நட்சத்திரம் வரும் நாளில் இங்கு சாமி தரிசனம் செய்வது கூடுதல் சிறப்பு என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் டிசம்பர் 20ல் சனிப்பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் இந்த ஆலயத்திற்கு சனீஸ்வர பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து கருப்பு துணியை வன்னி மரத்தில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.