மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் உள்ள அடிகளார் ஜீவசமாதியில் வழிபாடு செய்து  எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ( melmaruvathur adhiparasakthi siddhar peedam )


தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில்  தலைமை ஆன்மீகவாதியாக இருந்தவர் பங்காரு அடிகளார். பக்தர்களும் இவரை பின்பற்றுபவர்களும் அன்புடன் ’அம்மா’ என்றே அழைத்து வந்தனர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் கட்டாயம் இவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள்.


ஆதிபராசக்தி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்தும் பகதர்கள் பரவலாக வருவார்கள். இந்த கோவிலுக்கு பொதுவாகவே பெண் பக்தர்கள் அதிகம். இங்கு வந்து வழிபட்டால் இன்னல்கள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது.



 


பங்காரு அடிகளாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த எடப்பாடி  கே பழனிசாமி



 


பங்காரு அடிகளார் ( bangaru adigalar )


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே முன்னாள் ஆசிரியர் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1966ஆம் ஆண்டு துவக்கினார். மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை ஒருங்கிணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது. தைப்பூசம் நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம். கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற நிலை இருந்து வந்த நிலையில் பெண்களை கருவறைக்கு நேரடியாக சென்று அபிஷேகம் செய்யலாமென்று ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர்.




மாதவிடாய் நாட்களில் கூட பெண்கள் கருவறைக்கு செல்லலாம் என வழிபாட்டுத் தலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். தமிழ்நாடு மட்டுமல்லாது, 12 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் சித்தர் பீடத்திற்கு பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்த நிலையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உடல்நலக் குறைவால் பங்காரு அடிகளார், உலகை விட்டு மறைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர், அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தற்பொழுது பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி கோவில் கருவறை அருகே அருள்திரு பங்காரு அம்மா குரு மண்டபத்தில், கட்டப்பட்டுள்ளது.





எடப்பாடி  கே பழனிசாமி ( edappadi palanisamy  )

 

கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி  கே.பழனிசாமி ஜீவ சமாதிக்கு சென்று மரியாதை செய்து வழிபட்டார்.

 

மேலும் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து கோவில் வளாகத்திற்குள் பஞ்ச தீபம் ஏற்றி ஆதிபராசக்தியை வழிபட்டார்.  இதனை அடுத்து அடிகளார் இல்லம் சென்ற அவர், லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் வருகையை முன்னிட்டு ஏராளமான அதிமுகவினர் கோவில் வளாகத்திற்குள் கூடியிருந்தனர்.