இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு பகுதியிலும் ஒருவித காரணமும், ஒருவித புராண கட்டுக்கதையும் சேர்ந்தே உள்ளது.
தீபாவளி - ராமாயணம்:
தீபாவளியுடன் தொடர்புடைய முக்கிய கதையாக, ராமர் அயோத்திக்கு மீண்டும் வந்து அரசு பொறுப்பு ஏற்பதை குறிக்கும்படியாக அமைகிறது. இது பண்டைய காவியமான ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கதையின்படி, ராமர், அவரது சகோதரர் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சீதா ஆகியோருடன், அயோத்தியிலிருந்து 14 ஆண்டுகள் நாடு வனவாசம் சென்றார். ராமன் மனைவி சீதையை இலங்கை அரசன் இராவணன் கடத்திச் சென்றார்.
அதனை தொடர்ந்து சீதையை காப்பாற்றும் பொருட்டு, ராமன் இலங்கை மன்னன் ராவணனை போரில் வென்று சீதையை மீட்டார். பின்னர், மீண்டும் அயோத்திக்கு சென்று அரியணை ஏறினார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுவதாக சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மகாபாரதம்:
இதிகாசமான மகாபாரதத்தில் பாண்டு மன்னனின் ஐந்து மகன்களான பாண்டவர்கள், பகடை விளையாட்டில் கவுரவர்களிடம் தோல்வியடைந்தனர். அதன் விளைவாக பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தை எதிர்கொண்டனர். அவர்கள், வனவாசத்தை நிறைவு செய்து திரும்பி வந்தது, நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும் கொண்டாட்டமும் நிறைந்த நிகழ்வாக அமைந்ததாக புராணம் கூறுகிறது. அவர்கள் வீடு திரும்பியபோது, நகரம் பிரகாசமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இது நீதியின் வெற்றியையும், பாண்டவர்கள் மீதான மக்களின் அன்பையும் குறிப்பதாக அமைந்ததாக புராணம் கூறுகிறது.
காளி தெய்வம்:
மேற்கு வங்கத்தில், காளி தேவியோடு தீபாவளி கொண்டாட்டங்கள் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது. தீய சக்திகளுடனான மோதலில் அசுர மன்னன் ரக்தபீஜா, சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் தன்னைப் பிரதிபலிக்கும் சக்தியைப் பெற்றிருந்ததால், மோதலின் தீவிரம் அதிகரித்தது. இதனால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை.
இதையடுத்து காளி தேவி துர்கா தேவியின் நெற்றியில் இருந்து மூர்க்கமாக வெளிப்பட்டு, தீய சக்திகளை அழிக்கும் வேலையில் இறங்கினார். அவர் பயங்கரமான மோதலில் இறங்கி, தீய சக்திகளை அழித்தார். தீய சக்திகளை காளி தெய்வம் அழித்ததை கொண்டாடும் வகையில், தீபாவளி அமைந்ததாக வங்காள மக்கள் கருதுகின்றனர்.
நரகாசுரன் - கிருஷ்ணர்:
இந்தியாவின் தெற்குப் பகுதிகளில், மிகவும் சக்தி வாய்ந்த அரக்க மன்னன் நரகாசுரனை, கிருஷ்ணர் அழித்ததை கொண்டாடும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
இதுபோன்று பல இடங்களில் பல நம்பிக்கைகளை மக்கள் கொண்டுள்ளனர். குறிப்பாக, இந்த தினத்தை தீய சக்திகள் அழிந்து நன்மை பிறந்ததாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ALso Read: Migratory Birds: கோடைகாலத்தில் இந்தியாவுக்கு வருகைதரும் அழகிய பறவைகள்...