சிவாலயங்களில் சிவபெருமானுக்கு எதிரே எவ்வாறு நந்தி இருப்பாரோ, அதேபோல சிவாலயங்களில் கண்டிப்பாக சண்டிகேஸ்வரர் இருப்பார். சிவனை வணங்கி விட்டு நாம் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரர் கண்டிப்பாக இருப்பார். அனைத்து சிவாலயங்களிலும் இதை காண முடியும்.


சண்டிகேஸ்வரைர வணங்கும்போது பலரும் கை தட்டி வணங்குவார்கள். மேலும், சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது என்றும் கூறுவார்கள். உண்மையில் இது தவறாகும். சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டி சத்தம் எழுப்பக்கூடாது.


சண்டிகேஸ்வரர் என்பவர் தீவிர சிவ பக்தர் ஆவார். சிவபெருமானுக்கு செய்யப்படும் அனைத்து நேவேத்தியங்களும், மாலைகளும் சண்டிகேஸ்வருக்கு சேரும் என சிவபெருமானே அருள் வழங்கியதாக புராணங்கள் கூறுகிறது. மேலும், அவரின் சிவ பக்தியை மெச்சியே சிவ பெருமான் சிவசொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை சிவபெருமானே வழங்கினார். அவரே சண்டிகேஸ்வரர் ஆவார்.


சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவபெருமானை நினைத்து தவம் புரிபவர். சிவ சிந்தைனயிலே இருப்பவரான சண்டிகேஸ்வரர் முன்பு கைதட்டி அவரது தியானத்தை கலைப்பத பாவம் என்றும் ஐதீகம் கூறுகிறது. பிறகு ஏன் அவர் முன்பு கை தட்டப்படுகிறது என்று கேட்கிறீர்களா?


சிவனின் சொத்துகளை நிர்வகிக்கும் சண்டிகேஸ்வரர் முன்பு நின்று நாம் வணங்கி இரு கைகளையும் துடைத்து, கோயிலில் இருந்து சிவ சொத்துக்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று கூறும் விதமாக அவர் முன்பு நின்று கைகளை துடைத்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். இதை சிலர் தவறுதலாக புரிந்து கொண்டு கைகளை தட்டிச் செல்கின்றனர்.


யார் இந்த சண்டிகேஸ்வரர்?


சோழ நாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற கோயில் உள்ளது. அந்த கிராமத்தில் எச்சதத்தன் – பவித்திரை என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு விசாரசருமன் என்ற மகன் இருந்தார். விசாரசருமன் பசுக்கள் மேய்த்து வந்தார். அவர் பசுக்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவர் மேய்த்து வந்த பசுக்களும் அவர் மீது எல்லையில்லா அன்பு வைத்திருந்தது.


விசாரசருமன் தீவிர சிவபக்தன் ஆவார்.  அவர் அங்கு மணலில் சிவபெருமானின் வடிவத்தை வடித்து, சிவபெருமானை நினைத்து தியானம் செய்வார். அவர் உருவாக்கிய சிவலிங்கத்தின் மீது பசுமாடுகள் பால்களை தானாகவே சுரந்து அபிஷேகம் செய்து வந்தன. பின்னர், வீடு திரும்பிய பின்னர் தங்கள் வீடுகளிலும் பசுக்கள் பால் கறந்து வந்தன.


இந்த விஷயத்தை அறிந்த அதே ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், விசாரசருமன் தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால், அடுத்த நாள் தனது மகன் என்ன செய்கிறான் என்பதை காண எச்சதத்தன் சென்றார். அப்போது, வழக்கம்போல மணலில் சிவலிங்கத்தை வடித்து விசாரசருமன் சிவனை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது, பசுக்களும் வழக்கம்போல தங்கள் பாலால் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய தொடங்கினர்.


இதைத் தொலைவில் இருந்து கண்ட எச்சதத்தன் கோபத்தில், விசாரசருமன் உருவாக்கிய மணல் லிங்கத்தை காலால் எட்டி உதைத்து உடைத்தார். தியானம் கலைந்து சிவலிங்கம் உடைந்து இருந்ததை கண்டு கோபம் அடைந் விசாரசருமன், அங்கே இருந்த குச்சி ஒன்றை தனது தந்தை மீது வீசினார். அந்த குச்சி கோடாரியா மாறி, எச்சதத்தன் காலை காயப்படுத்தியது.


அப்போது, விசாரசருமன் முன்பு தோன்றிய சிவபெருமானும் – பார்வதி தேவியும், எச்சதத்தின் காலில் இருந்த காயத்தை குணப்படுத்தினர். விசாரசருமனின் சிவ பக்தியை கண்டு, சிவ சொத்துகளை நிர்வாகம் செய்யும் பதவியான சண்டிகேச பதவியை வழங்கினார். அன்று முதல் விசாரசருமன் சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், இவ்வாறு புராணம் சொல்கிறது. 63 நாயன்மார்களில் சண்டிகேஸ்வரரும் ஒரு நாயன்மாராக உள்ளார்.


இவ்வாறு சிவ சிந்தனையில் தியானத்தில் அவர் இருப்பதால்தான், அவர் முன்பு கை தட்டக்கூடாது என்றும் புராணங்களில் கூறப்படுகிறது, நம்பப்படுகிறது