தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூத்தேர் பவனி விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து வழிநெடுக அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக அளித்தனர். திண்டுக்கல் நகரில் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
இந்த கோவில் மாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை சாமி சாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. விழாவின் துவக்கமாக நேற்று மாலை கோவில் வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை பூத்தேர் வீதி உலா நடந்ததுகோவில் பிரகாரத்தில் இருந்து கிளம்பிய பூத்தேரில் நான்கு ரத வீதிகள் வழியாக சென்றது.
தேரில் வீற்றிருந்த அம்மனுக்கு பக்தர்கள் மலர்களை காணிக்கையாக வழங்கினர். விநாயகர், சிவன் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்த தேர் முன்னே செல்ல பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து சென்றது. தேரின் முன்பு பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர். மேல தாளங்கள் முழங்க ரத வீதிகள் வழியாக சென்ற அம்மன் பூத்தேரினை காண்பதற்காக திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.