தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைகோட்டையில் கிருஷ்ண தேவராய மன்னரால் 1600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண ராமர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்கரைகோட்டை, கோபிசெட்டிபாளையம், கொளகம்பட்டி, பெத்தூர்‌, பாப்பிசெட்டிப்பட்டி  உள்ளிட்ட 35-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து கல்யாணராமருக்கு திருக்கல்யாணம்‌ நடத்தி தேர்திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கல்யாண ராமருக்கு கல்யாணம் நடத்தி திருவிழா செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி, கல்யாணராமர் கோயில் திருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தைச் சார்ந்த மக்கள் சிறப்பு பூஜை செய்து வந்தனர்.


மேலும் விழாவின் முக்கிய நாளான நேற்று கல்யாண ராமர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேத பண்டிதர்கள், வேதம் வாசிக்க, ஸ்ரீகல்யாணராமர்-சீதை இருவருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருத்தளத்தில் கல்யாண கோலத்தில் காட்சி அளிக்கும் கல்யாண ராமர் சீதையின் திருக்கல்யாணத்தில், திருமண தடைகள் உள்ள,  திருமணம் ஆகாத பெண்கள், வாலிபர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். அதேபோல் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வந்து வழிபட்டால் விரைவில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் மற்றும் செவ்வாய் தோஷம்  நீங்கும் என்பது ஐதீகம். இதனால் கல்யாண ராமர் கல்யாண நிகழ்ச்சியில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் வாலிபர்கள், கலந்து கொண்டு கல்யாணராமரை மனம் உருகி வேண்டிக் கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கல்யாண ராமர் சீதை தெய்வங்களின் ரத ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. இந்த திருத்தேர் ஊர்வலம் தென்கரைகோட்டை, திருவள்ளுவர்  நகர், பாத்திமா நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கையுடன் சென்றது. மேலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாள இசையுடன்  சுவாமிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பொழுது, வழி நெடுங்கும் பக்தர்கள் நின்று பூஜை செய்து ஆரத்தி எடுத்து வணங்கினர். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கல்யாண ராமருக்கான திருவிழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதால் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வணங்கினர்.