தஞ்சாவூர்: புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று (செப்-20) தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் திருச்சியில் பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் பெருமாள் மற்றும் நவராத்திரி நாயகிகளான துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு மிகவும் உகந்த தினங்களாகும். அதேபோல் இந்த புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் சிறப்பானவை. இந்த நாளில் பெருமாளை வழிபட்டால் அவரது முழுமையான அருளை நாம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், சனி பகவான் புரட்டாசி மாதத்தில்தான் அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது.
புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான மாதம். அதிலும், சனிக்கிழமை என்பது அவருக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். அதனால், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை விரதமிருந்து வழிபட்டால், நாம் கேட்பது அனைத்தும் கிடைக்கும். அதனுடன் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, பெருமாளின் அருள் பூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நம் வாழ்க்கையில் வரும் துன்பங்களுக்குக் காரணம் நம்முடைய கர்மவினைகளே. எனவே, துன்பங்களுக்குப் பிறரை குறை சொல்லாமல், அதற்கான தீர்வை நாமே தேட வேண்டும். இந்த சிந்தனையுடன், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எளிதில் கிடைக்கும்.
பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஹிந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாள் பக்தர்கள் நெற்றியில் திருநாமம் அணிந்து, பெருமாளுக்குப் பிடித்தமான சர்க்கரைப் பொங்கல் மற்றும் பிற நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம். சில பக்தர்கள் கையில் உண்டியல் ஏந்தி, "கோவிந்தா, கோபாலா, நாராயணா" என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று காணிக்கை பெறுவார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் பணம் ஏழுமலையானுக்கு காணிக்கையாகச் செலுத்தப்படும். தானமாகப் பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
பெருமாளை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்களில், புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். பச்சரிசியை இடித்து, அச்சுவெல்லப் பாகு மற்றும் ஏலக்காய் கலந்து, அதை விளக்கு போல் வடித்து, அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி பெருமாளை வழிபடுவார்கள்.
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் தஞ்சை பள்ளியக்ரஹாரம், கும்பகோணம், திருச்சி பெருமாள் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, தென்திருப்பதி, சீனிவாச பெருமாள் கோயிலில், இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனையடுத்து ராஜ அலங்கார பெருமாளை தரிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 5:30 மணிக்கு கால சாந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 8 மணிக்கு சாயரட்சை நடக்கிறது.