கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புரட்டாசி மாதம் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து நந்தி பகவானே மனமுருகி வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிந்த பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.
தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
புரட்டாசி மாதம் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ஆலயம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதுடன் திருமுடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனையும் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் தேரோட்டம் மற்றும் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆலய பாலாலயம் பணி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள திருத்தேர் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை ஒட்டி தான்தோன்றி மலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்