சித்திரை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தாள்களை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் தென்னிந்தியாவில் தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி மற்றும் சங்கராந்தி என பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று, வழிபாடு செய்வது வழக்கம். சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சோபகிருது ஆண்டு பிறந்த இந்த தமிழ்ப் புத்தாண்டானது, மகலாட்சுமி வழிபாட்டிற்கு உரிய மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பிறந்துள்ளது. அதோடு இந்த ஆண்டு சித்திரை முதல் நாளில் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. பெருமாளுக்குரிய முக்கிய விரத நாளான இந்த நாளில் பெருமாளையும், மகாலட்சுமியையும் வழிபட வீட்டில் செல்வ வளம் பெருகும் என நம்பப்படுகிறது. இத்தகைய பல்வேறு அம்சங்கள் பொருந்திய தமிழ்ப்புத்தாண்டையொட்டி  ஏராளமான பக்தர்கள்,  அதிகாலையிலேயே குளித்து முடித்து புத்தாடை அணிந்து கோயில்களில் குவிந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுவதையோட்டி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.




இதன் காரணமாக கோவையில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோவையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து, சாமி தரிசனம் செய்தனர். சித்திரைக் கனியை முன்னிட்டு தண்டு மாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அம்மன் நடை முழுவதும் பழத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அம்மனுக்கு அதிகாலை முதலே தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர். தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்று நீங்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.




இதேபோல சித்திரை திருநாளான இன்று கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83வது சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இக்கோவிலில் சித்திரை முதல் நாளான இன்று 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தாள்களை கொண்டும், தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டது. சித்திரை திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. இக்கோயிலுக்கு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருநாளான்று பணத்தாள்களால் அம்மன் சிலையை அலங்கரித்து வழிபாடு செய்வது வழக்கம். இதேபோல் கோவையிலுள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜையுடன் வழிபாடு செய்து தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண