தஞ்சாவூர்: பசும் சோலையின் நடுவே வானுயர உயர்ந்த பூண்டித் தாயின் ஆலயம், நெல்லும், செங்கரும்பும் தலையாட்டி வரவேற்கும் இனிய காட்சிகளை கொண்ட பெருமை திருக்காட்டுப்பள்ளி அலமேலுபுரம் பூண்டியில் காணலாம்.


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கே 2 கி.மீ. அருகிலும் கல்லணைக்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சை-திருச்சி ரயில் பாதையில் பூதலூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே பத்து கி.மீ. தூரத்திலும் பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுதான் அலமேலுபுரம் பூண்டி.  மக்களின் பேச்சு வழக்கில் பூண்டி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பசும் சோலையின் நடுவே வானுயர உயர்ந்த பூண்டித் தாயின் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு பக்கம் பசுமையான நெல்லும், மறு பக்கம் செங்கரும்பு, வாழை என்று பசுமை சோலையில் அமைந்துள்ளது இத்தலம். 


கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ள 87 பங்குகளில் ஒன்று தான் இந்த பூண்டி பேராலயம் ஆகும். 1710 ல் இத்தாலி நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இயேசுவின் நற்செய்தியை போதிக்க வந்தவர் தான் கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி. இவர் இயேசு சபைச் சேர்ந்த குரு. தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து கிறிஸ்தவ குருவாக சமயத்தொண்டு ஆற்றினார். இவரை தமிழக வழக்கப்படி அருட்தந்தை வீரமாமுனிவர் என்றும் அழைக்கிறோம்.




இவர் 1714-1720 இந்த ஆண்டுகளில் பூண்டியில் தங்கியிருந்தபோது மரியன்னைக்கு ஆலயம் ஒன்று கட்டினார்.. அங்கு எழுந்தருளியுள்ள மாதாவை அமலோற்பவ மாதா எனப் போற்றி வணங்கினார். 1945 ல் பூண்டி திருத்தலமாகவே விளங்கியது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்துநகரில் 1858ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் நாள் அன்னை மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்கு காட்சி தந்து 'நாமே அமல உற்பவம்" என்று சொல்லி மக்களை செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். லூர்துநகரில் மாதா திருக்காட்சி தந்தார். இதன் நினைவாக அதே ஆண்டில் அதே தோற்றத்தோடு வடிவமைக்கப்பெற்ற மூன்று மாதா சுரூபங்கள்  இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இவற்றில் ஒன்றுதான் பூண்டிமாதா பேராலயத்தில் வைக்கப்பட்டது.


144 ஆண்டு பழமை வாய்ந்த அந்த சுரூபம் தான் பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா என்று மக்களால் போற்றப்படுகிறது. 1949ல் மிக்கேல்பட்டி என்னும் சிற்றூரை சார்ந்த பெரியவர் ஞானதிக்கத்தின் வயிற்றுவலி, அன்னையை நம்பியதால் அற்புதமாக குணமானது. இதுவே இத்திருத்தலத்தில் நடந்த  முதல் புதுமை. அவரளித்த காணிக்கையான நற்கருணை கதிர் பாத்திரம் இன்னும் இன்றும் அன்னை புகழ்பாடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


பூண்டி பங்கு 1945 ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நான் மேதகு ஆயர் பீட்டர் பிரான்ஸ்சிசால் ஏற்படுத்தப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டு மேதகு ஆயர் ரேமிஜியுஸ் காலத்தில் ஐம்பதாம் ஆண்டு நிறைவாக பொன்விழா கண்டது. இத்திருத்தலம்  திருத்தந்தை 2ம் ஜான்பால் உத்தரவு பெற்றதன் பின் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3ஆம் தேதி பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 4 பசிலிக்காக்களுள் பூண்டியும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் பாடுபட்ட திருச்சிலுவையின் சிறுபகுதி கர்தினால் லூர்துசாமி அவர்களின் உதவியால் அருட்தந்தை இராயப்பர் அடிகளார் பூண்டிக்கு கொண்டு வந்தார். அந்த திருச்சிலுவை அருளிக்கம் பக்தர்களின் வணக்கத்திற்காக மாதா பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.