கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பாதிரியார்கள் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் விபூதியிட்டு காலத்தை தொடங்கி வைத்தனர்.
இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது.
இதையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலை நடைபெற்றது. பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குதந்தை அற்புதராஜ், டேவிட் தன்ராஜ் உள்ளிட்ட பாதிரியார்கள் சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். இந்த சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் உலக மக்கள் சமாதானமாகவும் உலகம் அமைதியாகவும் இருக்க வேண்டியும், துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.