சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து,  வருகின்றனர்.

சித்திரகுப்தர்  ( Shri Chitragupta Swamy )



இந்து மத நம்பிக்கையில், எமதர்மன் முக்கிய அங்கம் வகிக்கிறார் . இந்துவாக வாழ்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் எமதர்ம ராஜாவால் எடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.  பூலோகத்தில் ஒருவர் செய்யும் பாவ, புண்ணியங்களை வைத்து எமதர்மர் அவர்களுக்கு  சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிப்பார் என்பது நம்பிக்கை.  இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு,  சித்திரகுப்தர் பணி என்பது நம்பிக்கையாக உள்ளது.




காஞ்சிபுரம் சித்திரகுப்தர்  கோயில் ( Kanchipuram Chitragupta Temple )


வரவு செலவு கணக்குகளைப் பார்க்கும் மிக முக்கிய  கடவுளாக பார்க்கப்படும்  சித்தரகுப்தருக்கு  உலகில் எங்கும் கோவில் கிடையாது. ஒரே ஒரு கோவில் மட்டுமே  சித்திரகுப்தருக்கு என உள்ளது. அந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார்  ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.  தொடர்ந்து பல்வேறு காலங்களில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன.




1911-ஆம் ஆண்டு  கோவில் சீரமைப்பு பணியின்பொழுது சித்திரகுப்தர் மற்றும் அவரது மனைவி கர்ணிகாம்பாள்  ஆகியோரின் இரண்டு உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால்  நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது  ஐதீகமாக உள்ளது.


சித்ரா பௌர்ணமி


உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி. சித்ரகுப்த சுவாமிக்கு இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லாத நிலையில், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்தர் சுவாமி எனும் பெயரில் தனி கோவில்  கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக விளங்கும் இக்கோவிலில் சித்ரகுப்த சுவாமிக்கு சித்ரா பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு நடத்தி, திருமண வைபவம் நடைபெறுவது வழக்கம்.



" நீண்ட வரிசையில் காத்திருந்து "


 

அந்த வகையில் சித்ரா பௌர்ணமியான இன்று, கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்த சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளி காப்பு சாத்தி மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, சித்திரகுப்தர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமில்லாமல் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்த சுவாமியை தரிசனம் செய்து தங்கள் வாழ்வின் பாவ புண்ணியங்களை பார்த்து எழுத வேண்டி, எள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கோவில் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பக்தர்களுக்கு எவ்வித இடர்பாடுகளும் இன்றி தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.