தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றத்துடன் 18 நாட்கள் விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு விழாவிற்காக, தஞ்சாவூர் பெரியகோவிலில் ஸ்ரீ சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்குள்ள புறப்பாடாகி நேற்று காலை கொடியேற்றப்பட்டது. இன்று 18ம் தேதி காலை பல்லக்கிலும், மாலை சிம்ம வாகனத்திலும் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. 19ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடு, 20ம் தேதி காலை விநாயகருக்கு சந்தனக்காப்பும், மாலை மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. 21ம் தேதி காலை சுப்பிரமணியர் பல்லக்கிலும், மாலை வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு, 22ம் தேதி சுப்பிரமணியருக்கு சந்தனகாப்பு அலங்காரம், மாலை சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடு நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் கோவிலுக்குள் புறப்பாடு மற்றும் சந்திரசேகரர் பட்டமும், மாலை சூரிய பிரபையில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடும், 24ம் தேதி மாலை சந்திர பிரபையில் சந்திரசேகரர் புறப்பாடும், 25ம் தேதி மாலை தியாகராஜ சுவாமி பிரகாரத்தில் பிரதட்சணமாகி வசந்த மண்டபத்தில் பிரவேசம், செங்கோல் வைபவம், 26ம் தேதி மாலை சந்திரசேகரர் முத்துப்பல்லக்கில் புறப்பாடு, 27ம் தேதி மாலை பூதவாகனத்தில் சந்திரசேகரர் புறப்பாடு ஆகியவை நடக்கிறது.
தஞ்சை பெரியகோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
என்.நாகராஜன் | 18 Apr 2023 12:07 PM (IST)
தஞ்சை பெரியகோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை பெரியகோயிலில் சித்திரை பெருவிழாவை ஒட்டி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
Published at: 18 Apr 2023 12:07 PM (IST)