ஆன்மீக ஆசிரியரான கௌதம புத்தரின் பிறந்தநாள் உலகெங்கிலும் புத்த பூர்ணிமா தினமாக கொண்டாடப்படுகிறது. வேத இலக்கியங்களின் படி புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுவதால் அவரின் போதனைகளை சார்ந்து புத்த மதம் உருவானது. அவரின் பிறந்த தினம் எது என உறுதியாக தெரியாத காரணத்தால் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தை புத்த பூர்ணிமா தினமாகவும் புத்த ஜெயந்தி தினமாகவும் மிகவும் விமரிசையாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கபிலவஸ்து நாட்டின் மன்னனின் மகனாக பிறந்த கௌதம புத்தர், அனைத்தையும் துறந்து தனது 29 வயதில் துறவறம் மேற்கொண்டார். புத்தரின் 2585 வது பிறந்த தினம் வரும் மே 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. மே 5ம் தேதி அதிகாலை 4.14 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மே 6ம் தேதி அதிகாலை 3.33 மணிக்கு முடிவடைகிறது. புனித தினமான புத்த பூர்ணிமா அன்று அவரின் பக்தர்கள் வழிபாடும் வேண்டுதலும் மேற்கொள்வார்கள். இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களிடத்திலும் இரக்கம் காட்ட வேண்டும் என்ற கொள்கையை கொண்ட புத்தரின் பிறந்தநாள் அன்று அவரின் பக்தர்கள் ஏழை எளியவர்களுக்கு தங்களால் ஈன்ற உதவிகளை செய்வார்கள்.
புத்தர் முக்தி அடைந்த தினம் :
அன்றைய தினம் புத்தர் நிர்வான நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கயா என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் போதி மரத்தின் அடியில் அமர்ந்து புத்தர் ஆறு ஆண்டுகளாக கடுமையான தவம் புரிந்து புத்தர் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று ஞான ஒளியை பெற்று முக்தி அடைந்தார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் அந்த தினம் புத்தர் நிர்வான தினமாக கொண்டாடப்படுகிறது.
எப்படி வழிபட வேண்டும் :
புத்த பூர்ணிமா தினத்தன்று வீட்டை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வழிபட வேண்டும். குறிப்பாக துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிரசாதமாக பாயசம் நைவேத்தியம் செய்து ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் மஹாவிஷ்ணு, சந்திர பகவான் மற்றும் யமதர்மரை வழிபட வேண்டும். இந்த தினத்தன்று சந்திரனை வழிபடுவதால் பண நெருக்கடி, மனநோயில் இருந்து விடுபடுவதுடன் தன்னம்பிக்கையும் கூடும். புத்த பூர்ணிமா தினத்தன்று புத்தரை மனதார வேண்டி வாழ்வின் அனைத்து நலன்களும் பெற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
அனைவருக்கும் இனிய புத்த பூர்ணிமா தின வாழ்த்துக்கள்!