கோடை காலம் வந்தாலே மக்கள் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் வீடடிற்குள் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். குறிப்பாக, கோடை காலத்திலே மக்களை மிரட்டும் விஷயம் என்னவென்றால், அக்னி நட்சத்திர காலமே ஆகும். கிராமப்புறங்களில் இதை கத்தரி வெயில் என்றும் கூறுவார்கள். அக்னி நட்சத்திரத்திற்கு அறிவியல்பூர்வமான விளக்கங்கள் இருந்தாலும், புராண கதைகளிலும் அக்னி நட்சத்திர காலம் குறித்து கூறப்பட்டுள்ளது.


அக்னி நட்சத்திர காலம்:


அக்னி நட்சத்திர காலம் உருவானது பற்றி மகாபாரத கதையில் என்ன கூறியிருக்கிறார்கள்? என்பதை கீழே காணலாம்.  ஒரு முறை கிருஷ்ண பரமாத்மாவும், அர்ஜூனனும் யமுனை நதிக்கரையில் நீராட சென்றிருந்தனர். அவர்கள் நீராட சென்ற யமுனை நதிக்கரையிலே காண்டவ வனம்  அமைந்திருந்தது. இந்த வனத்தில் மிகவும் அரிய வகை மூலிகைகள் செழிப்பாக வளர்ந்திருந்தது. இந்த மூலிகைகள் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக இந்திரன் மழையை அடிக்கடி பொழிய வைத்துக்கொண்டே இருந்தார்.


இந்த சூழலில் கிருஷ்ணபரமாத்மரும், அர்ஜூனனும் நீராட வந்தபோது அக்னிதேவன் மாறுவேடத்தில் முதியவர் போல வந்துள்ளார். வந்தவர் கிருஷ்ணரிடமும், அர்ஜூனனிடமும் இந்த வனத்திற்குள் செல்ல உதவ முடியுமா? என்று கேட்டார். அக்னிதேவன்தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொண்ட கிருஷ்ணர், என்ன காரணம் என்று தெரியாதது போலவே கேட்டார். அப்போது, முதியவர் வடிவில் இருந்த அக்னிதேவர் அதிகப்படியான நெய்யை சாப்பிட்டதால் தன்னை மந்தநோய் தாக்கியதாகவும், அதற்கு இந்த வனத்தில் உள்ள மூலிகைகளை சாப்பிட்டால் சரியாகும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்திரன் தொடர்ந்து மழையை பெய்ய வைத்தால் தன்னால் காட்டிற்குள் நுழைய முடியவில்லை என்றும் கூறினார். இதனால், தனக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.


காண்டீப வில்:


இதையடுத்து, சக்திவாய்ந்த காண்டீப வில்லை கொண்டு இந்திர தேவன் 21 நாட்கள் மழையை பொழியவிட வைக்காமல் தடுப்பதாகவும், இந்த சமயத்தில் காட்டிற்குள் சென்று மூலிகையை பறித்துக் கொள்ளலாம் என்றும் கிருஷ்ணர் கூறினார். அதேபோல, முதியவர் வேடத்தில் இருந்த அக்னிதேவன் காட்டிற்குள் சென்றதும் மழையை இந்திரன் பொழிய வைத்தான். காண்டீப வில் உதவியால் மழையை அர்ஜூன் தடுத்தான்.


இதன் அடிப்படையில், அக்னிதேவன் காண்டீப வனத்தை அழித்து தனது பசியை தீர்த்துக்கொள்ளும் காலமே அக்னி நட்சத்திர காலம் என்று மகாபாரதம் கூறுகிறது. சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். பஞ்சாங்கத்தின்படி, சித்திரையில் பரணி 3ம் காலத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலம் என்று கூறப்படுகிறது.  


மேலும் படிக்க: kanchipuram: சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேக விழா - குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்


மேலும் படிக்க:  கரூர் ரங்கநாதர் சுவாமி ஆலய சித்திரை தேரோட்டம்; மேளதாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்