தஞ்சாவூர்: சோழர்களின் போர்களும், வெற்றிகளும் அனைவரும் அறிந்தது. ஆனால் சோழர்களின் போர் தெய்வம் நிசம்பசூதனி அம்மன் பற்றி தெரியுங்களா? தெரிந்து கொள்வோம். இந்த அம்மனை வழிபட்டு, அம்மனிடம் அருளை பெற்று போருக்கு சென்றுள்ளனர் சோழ மன்னர்கள்.


சோழ மன்னர்களின் வெற்றி தெய்வமாக வடபத்ரகாளி (எ) நிசம்பசூதனி அம்மன் கோயில் இருந்துள்ளது. திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது தெரிய வருகிறது.


சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியம் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார்.


இந்த சமயத்தில் எதிரிகள் விஜயாலய சோழனை எதிர்த்து நேரடியாக போரிட முடியாததால், சில துஷ்ட சக்திகள் மூலம் சோழனுக்கு சில மன உளைச்சல்களை ஏற்படுத்தியதால் போரின் போது சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடைகள் நீங்க வேண்டும். போரில் வெற்றி பெற வேண்டும் என்பதால் மன்னர் தன்னுடைய ஆச்சாரியர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். 


அப்போது சில துஷ்ட சக்திகள் மூலம் எதிரிகள் இதுபோன்ற செயலை செய்துள்ளனர் என்பதை அறிந்து கொண்ட ஆச்சாரியார்கள் இதனை சரி செய்ய நிசும்பன், சும்பன் ஆகிய அரக்கர்களை கொன்ற,  நிசும்பவதம் நிசும்பசூதனி அம்மன் பற்றி மன்னருக்கு விளக்கி உள்ளனர். ஆச்சாரியார்களின் கூற்றை அறிந்து மன்னர் நிசும்பசூதனி அம்மனை வழிபட்டுள்ளார்


இதற்கு பின்புதான் மன்னருக்கு போரின் போது ஏற்பட்ட மன கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி உள்ளது. பின்னர் அசாத்திய வெற்றி மிக சுலபமாக பெற்றார் மன்னர். இதிலிருந்து மன்னரின் வெற்றி தெய்வமாக நிசும்பசூதனி மாறி உள்ளார்.


பின்பு அம்மனுக்கு தொடர்ந்து வழிபாடு செய்து அம்மனிடம் அருளை பெற்று போருக்கு சென்றுள்ளனர் சோழ மன்னர்கள். சோழ மன்னர்களின் தொடர்ந்து அதன் பின் வந்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் அம்மனை தொடர்ந்து வெற்றி தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இதற்கு பின்னர் 250 வருடம் தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கி உள்ளது.


இந்த கோயில் தற்போது அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நான்கு நாட்களும் அம்மனுக்கு விஷேசமான நாட்களாகும், வருடத்தில் தை மாதம், அம்மனுக்கு பால் குடம், காவடி, திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்த அம்மனை 9 வாரம் வந்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. சோழ தேச மன்னர்களின் வெற்றி தெய்வமாக இருந்ததால், சோழதேச மக்களுக்கும் நிசம்பசூதனி அம்மன் வெற்றி தெய்வமாக இன்றும் வணங்கப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.