தஞ்சாவூர்: தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர். வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.


இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை


பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.


இஸ்லாமியர்களின் தூதர் இப்ராஹிம்


இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயில் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். 




இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி  மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுகிறது. இதனை ஈகைத் திருநாள் என்றும் கூறுவர்.


தஞ்சை மாவட்ட பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை


தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள  பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.


இதில் குழந்தைகள் பெண்கள் என இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகை நடத்தினர். இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சை கீழவாசல் அண்ணா திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தஞ்சை மாநகர பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.


வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்


தொழுகையில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோல் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பாபநாசம் பகுதியில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


பாபநாசம் பகுதியில் பக்ரீத் தொழுகை


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாபேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத்  பண்டிகையினை  இஸ்லாமியர்கள் சிறப்புடன் கொண்டாடினர். சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்று  ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.


திறந்தவெளி திடலில் சிறப்பு தொழுகை


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை இஸ்லாமிய முகலாய கமிட்டி சார்பில் பக்ரீத் பண்டிகை வடசேரி ரோட்டில் உள்ள திறந்தவெளி திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.


தொழுகையில் கலந்து கொள்ள வந்த இஸ்லாமியர்களுக்கு கமிட்டி சார்பில் குடிநீர், பேரீச்சம்பழம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர், இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.