ஆனி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம். பச்சை கரை மஞ்சள் பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிந்து ஸ்ரீ தேவி,பூதேவி உடன் வீதி உலா வந்த வரதராஜ பெருமாள்.





கோயில் நகரம் காஞ்சிபுரம் ( Temple City Kanchipuram ) 


 


 


காஞ்சிபுரம் கோயில் நகர மாவட்டத்தில் இருந்து வருகிறது.  அதற்கு ஏற்றார் போல்  வருடத்தில் 300 நாட்களுக்கு மேல் திருவிழா நடக்கும் நகரமாகவும் காஞ்சிபுரம் உள்ளது. 1700 ஆண்டுகளுக்கு முன்பு கூட  பல  சமயங்கள் சார்பாக நூற்றுக்கணக்கான திருவிழாக்கள் நடைபெற்று வந்தது. அந்த வகையில் பாரம்பரிய நகரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில், பிரதான கோயிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ( Kanchipuram Varadharaja Perumal Temple) உள்ளது. 






திருவடி கோயில் புறப்பாடு உற்சவம்


 


 


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வருடம் முழுவதும் 200 நாட்களுக்கு குறையாமல் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் உலகப் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம்  தொடர்ந்து வசந்த உற்சவம் நடைபெற்றது.


108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளின் அவதார நட்சத்திரமான ஹஸ்தம் நட்சத்திரத்தையொட்டி திருவடி கோயில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.


 


திருவடிகோயில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலைமீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பச்சை கரை மஞ்சள் பட்டு உடுத்தி,வைர,வைடூரிய தங்க, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.




 


பின்னர் மேளதாளங்கள் முழங்க,வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர  ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு  எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் திருக்கோவிலுக்கு திரும்பினார்.


ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோயிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.