திருவண்ணாமலை (Tiruvannamalai News) பஞ்சபூத ஸ்தளங்களில் அக்னி தளமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா, மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா, இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து, பராசக்தி அம்மன், வளைகாப்பு மண்டபத்தில் எழுந்திருளி, அதில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து பராசக்தி அம்மனுக்கு சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார், அதன் பின்னர் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து கருவுற்ற பெண்கள் அங்கு வந்த பெரியோர்களிடம் வளையல்களை கொடுத்து அதனை கையில் போட்டுகொண்டு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு எதற்கு ?
தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் “ஆடிப் பூரம் திருநாள்’ மிகவும் சிறப்பானது. இன்றுஆடிப்பூரம் தினமாகும். இன்று வைணவத் திருக்கோயில்களில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் பராசக்திக்கு விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம்.
அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. ஆடிப்பூரத்தையட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களை வாங்கித் தந்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகம்.
உங்கள் வாழ்க்கை வளமையாகும் வரத்தை நிச்சயம் தருவாள் அம்பிகை.
ஒவ்வொரு பெண்ணின் வடிவிலும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால் எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை என்று அவரவரால் இயன்ற மங்களப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் சிறக்கச் செய்யும். இன்பங்கள் நிறையச் செய்யும் என்பது ஐதீகம். தாலிபாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக நீங்கள் வேறு எதுவும், செய்ய வேண்டாம். ஆடிப்பூர நாளில் அம்மனுக்குக் கொஞ்சம் வளையல் வாங்கிக் கொடுங்கள். பதிலுக்கு உங்கள் வாழ்க்கை வளமையாகும் வரத்தை நிச்சயம் தருவாள் அம்பிகை.